695 மில்லியன் அமெ. டொலர் நிதி திறைசேரியில் வைப்பீடு

1 Min Read

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய 695 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தவணை நிதி நாட்டுக்கு கிடைத்துள்ளதைத் தொடர்ந்து திறைசேரியின் கணக்கில் அந்நிதி வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் 5ஆவது, 6ஆவது மதிப்பாய்வுகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததை அடுத்து அந்நிதி இலங்கையின் திறைசேரிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த 27ஆம் திகதி நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த மதிப்பாய்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் 2023 மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்தால் 3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதி அங்கீகரிக்கப்பட்டது. அந்த வகையில் இதன் 5ஆவது, 6ஆவது மதிப்பாய்வுகளை அங்கீகரிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு கடந்த 27ஆம் திகதி கூடியது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கெஞ்சி ஒகாமுரா, சவால்மிக்க சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் நீடிக்கப்பட்ட நிதி வசதிக்கான விதிமுறைகளை இலங்கை வலுவாக செயற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். ‘தித்வா’ புயல் தாக்கம் மற்றும் மத்திய கிழக்கு யுத்த சூழ்நிலை காரணமாக இலங்கையின் பொருளாதாரத்துக்கு ஆபத்து நிலவுவதாகவும் மேலும் அவர் தெரிவித்தார். இந்த (2026) ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதம்வரை மந்தமடையுமென்று எதிர்வுகூறியுள்ளதுடன், எரிபொருள் விலை உயர்வு மற்றும் சுற்றுலாத்துறை வருமானம் குறைந்தமை இதற்கான காரணங்களாக அமைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *