மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது எல்லையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சி அதிருப்தி தருவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்தது.
இத்தருணத்தில் இவ்வாறான முடிவு எடுப்பதற்கான தேவை தொடர்பாக அரசாங்கம் எவ்வித விளக்கமும் அளிக்காதிருப்பது சந்தேகத்தை தோற்றுவிக்கும் ஒரு விடயமாகுமென்பதுடன், இது தொடர்பாக உடனடியாக விளக்கமளிப்பது ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சரின் பொறுப்பும் கடப்பாடாகுமென்பதை தாம் வலியுறுத்துவதாகவும் ஐ.ம.ச.
தெரிவித்தது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது எல்லை அரசியலமைப்பால் நிர்ணயிக்கப்பட்டதாகும். அதில் மாற்றமோ அல்லது திருத்தமோ மேற்கொள்வதாயின் அது அரசியலமைப்பில் செய்யப்படும் திருத்தத்தினூடாக மட்டுமே சாத்தியமாகும். தற்போதைய அரசாங்கம் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக முன்வைத்த கொள்கைப் பிரகடனத்தின் 194ஆம் பக்கத்தில் புதிய அரசியலமைப்பு ஒன்று வரைபு செய்யப்படுவதுடன், அது நாட்டு மக்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டு சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படுமென்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் திருத்தங்களுக்கு எதிராக கடந்த காலத்தில் கடுமையான குரலெழுப்பியது தற்போதைய அரசாங்கத்தின் பிரதான பங்காளியான ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP) பாராளுமன்ற உறுப்பினர்களே ஆவர். இந்த முன்மொழிவு சட்ட அமைப்பின் தொடர்ச்சித்தன்மை, சட்டத்தின் இறைமை மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் ஆகியவற்றில் நேரடித் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. அதேபோன்று அரசாங்கம் இதன் மூலம் தகுதியுடைய, பதவி உயர்வுகளுக்கான வாய்ப்புகளை கொண்ட நீதிபதிகளுக்கான அக்காலப்பகுதியை மேலும் இரண்டு வருடங்களுக்கு முன்னோக்கித் தள்ளிப்போடுவது கடுமையான அநீதியாகும். ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக இந்த முன்மொழிவை வாபஸ் பெற வேண்டும் எனவும், மக்களின் இறையாண்மைக்குச் சவால் விடுக்கக் கூடாதெனவும் நாம் சுட்டிக்காட்டுகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



