மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 5 மாடி மகப்பேறு மற்றும் சத்திரசிகிச்சை வார்டு வளாகம் இன்று (04) முற்பகல் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அதிகாரப்பூர்வமாக மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது.
இந்த ஐந்து மாடி மகப்பேறு மற்றும் சத்திரசிகிச்சை வார்டு வளாகத்திற்காக சுகாதார அமைச்சினால் இதுவரை ரூ. 1,457 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தின் தரைத்தளமும் முதலாவது மாடியும் மகப்பேறு விடுதிகளைக் கொண்டுள்ளன. இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடிகளில் பெண் சத்திரசிகிச்சை விடுதிகள் நிறுவப்பட்டுள்ளன.
2019 ஆம் ஆண்டில் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, 2 ½ வருடங்களுக்குள் அதாவது 2022 பெப்ரவரி மாதத்தில் பணிகளை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், 2025ஆம் ஆண்டு தொடக்கத்திலும் அதன் கட்டுமானப் பணிகள் சுமார் 30% மாத்திரமே நிறைவடைந்திருந்தன. தற்போதைய அரசாங்கம் இதற்காக புதிய அமைச்சரவைப் பத்திரமொன்றைச் சமர்ப்பித்து, புதிய மதிப்பீடுகளைத் தயாரித்து கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தியது. இதன் மூலம் 2025 ஒக்டோபர் மாதத்திற்குள் முதல் இரண்டு மாடிகளின் பணிகள் நிறைவடைந்ததுடன், 2026 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் முழுமையான கட்டுமானப் பணிகளும் நிறைவுசெய்யப்பட்டன. அதற்கமைய, தற்போது இக்கட்டடத்தின் மகப்பேறு விடுதிகளைக் கொண்ட இரண்டு மாடிகளும், பெண் சத்திரசிகிச்சை விடுதிகளைக் கொண்ட இரண்டு மாடிகளும் நோயாளி பராமரிப்புப் பணிகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன, ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரத் குமார, மொனராகலை பிரதேச சபையின் தவிசாளர் ஜானக குருப்பு, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் (பொறியியல் சேவைகள்) சாலின்த பண்டார, பிரதிப் பணிப்பாளர் நாயகம் (பொறியியல் சேவைகள்) எச்.எம்.ஐ.சி. ஹேரத், ஊவா மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டப்ளியூ.ஆர்.எம். மஹேந்திர செனவிரத்ன, மொனராகலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் சேனக ஹேவாமான்ன, வைத்தியசாலைப் பணிப்பாளர் விசேட வைத்தியர் இரேஷா பத்திரகே ஆகியோருடன் விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பிரதேசத்தின் அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.



