நேபாளத்தின் காத்மண்டு நகரில் நடைபெற்று வரும் மத்திய ஆசிய மகளிர் கரப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை அணி ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.
கசகஸ்தானுக்கு எதிராக நேற்று முன்தினம் (27) நடைபெற்ற ஆறாவது இடத்திற்கான போட்டியில் இலங்கை அணி 1–3 என தோல்வியை சந்தித்ததை அடுத்தே ஆறாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டது. இந்தப் போட்டியில் சிறந்த ஆரம்பத்தைப் பெற்ற இலங்கை மகளிர் 25–15 முதல் சுற்றில் வெற்றியீட்டினர்.
என்றபோதும் இரண்டு மற்றும் மூன்றாவது சுற்றுகளில் கிரிகிஸ்தான் வீராங்கனைகள் கடுமையாக சவால் கொடுத்தனர். அந்த இரண்டு சுற்றுகளையும் கிரிகிஸ்தான் அணி தலா 25–23 என்ற புள்ளிகளால் வெல்ல முடுடிந்தது. நான்காவது சுற்றில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய கிரிகிஸ்தான் அந்த சுற்றையும் 25–15 என சவால் இன்றி வென்றது. எட்டு அணிகள் பங்கேற்றிருக்கும் இந்தப் போட்டியில் மாலைதீவு 7 ஆவது இடத்தையும் பங்களாதேஷ் 8அவது இடத்தையும் பிடித்தன.
முன்னதாக இலங்கை அணி மாலைதீவுக்கு எதிரான போட்டியில் 3–0 என இலகுவாக வெற்றியீட்டியதோடு பங்களாதேஷுக்கு எதிரான ஆட்டத்தையும் 3–0 என வென்றது. எனினும் ஈரானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 0–3 என தோல்வியை சந்தித்தது.



