மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மற்றும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் திரின் தி டாம் (Trinh Thi Tam), பிரதித் தூதுவர் லீ வான் ஹோங் (Le Van Hong) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று அண்மையில் (26) பெலவத்தையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
சமீபத்தில் வியட்நாம் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான தோ லாம் (To Lam), இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் குறித்து கலந்துரையாடுவதே இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாகவிருந்தது. இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பில் அதிபர் தோலாம் பெரும் திருப்தியை வெளிப்படுத்தியதாகக் குறிப்பிட்ட தூதுவர், இந்த விஜயத்தின் பின்னர் இலங்கையுடனான வியட்நாமின் இராஜதந்திர உறவுகளை விரிவான பங்களிப்பு மட்டத்திற்கு மேம்படுத்திக்கொள்ள முடிந்ததாகவும் தெரிவித்தார். மேலும், இலங்கைக்குத் தேவையான உரங்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள், இலங்கையுடன் நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் தொழில்துறை ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
வியட்நாம் அதிபரும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான தோ லாமினால் , மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நினைவுப் பரிசும் இச்சந்திப்பின் போது வியட்நாம் தூதுவரால் வழங்கி வைக்கப்பட்டது.



