பங்களாதேசத்தில் சின்னமுத்து நோய் வேகமாகப் பரவிவரும் நிலையில் வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் தாதியர்களின் ஹஜ் பெருநாள் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தவும் சிறுவர்களைக் காப்பாற்றவும் பாரிய தடுப்பூசித் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார். இந்நோய் வேகமாகப் பரவிவரும் நிலையில் பங்களாதேசத்தில் வைத்தியசாலைகள் நிரம்பி வழிவதை அவதானிப்பதாக யுனிசெப் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தகவல்களின்படி, கடந்த இரு மாதங்களுக்குள் சுமார் 500 சிறுவர்கள் இந்நோயினால் உயிரிழந்துள்ளனர். அத்தோடு இந் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 60, ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. ஆய்வக முடிவுகளுக்காகப் பலர் காத்திருப்பதால், சரியான எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சின்னமுத்து நோயானது, இருமல், தும்மல் மூலம் வேகமாகப் பரவக்கூடியதாகும். குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இந்நோய்க்குரிய தடுப்பூசியைப் பெற்றிராவிட்டால் இந்நோயின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரிடும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். பி.பி.சி



