பொருளாதார ஸ்திரம், வெளிநாட்டு கையிருப்பை வலுப்படுத்துவதில் இலங்கை முன்னேற்றம்

1 Min Read

கடந்த சில ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதிலும் வெளிநாட்டு கையிருப்பு மட்டத்தை வலுப்படுத்துவதிலும் சந்தை நம்பகத்தன்மையை மீளக் கட்டியெழுப்புவதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் செயற்றிட்ட பிரதானி எவான் பபஜோர்ஜியோ தெரிவித்தார்.

விரிவாக்கப்பட்ட நிதி வசதி செயற்றிட்டம் தொடர்பான 5ஆம், 6ஆம் கட்ட மீளாய்வுகளில் எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாட்டுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக ஆராயும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் சபை நேற்று கூடியபோதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், அரசாங்க அதிகாரிகள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையால் பொதுமக்கள், முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக ஸ்திரமடைந்து வருகின்றது. எனினும் அண்மையில் உருவாகியுள்ள உலகளாவிய பொருளாதார மாற்றம் மற்றும் சவால்கள் இலங்கையின் பொருளாதாரத்துக்கு புதிய அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

மேலும் கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் கொள்கைசார் கட்டமைப்பு தற்போது வலுவானதும் முன்னேற்றமானதுமான நிலையில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தினது இயக்குநர் சபையின் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட நிதி விடுவிப்பின் மூலம் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை மேலும் வலுப்படுத்த முடியுமென்று இலங்கை மத்திய வங்கி எதிர்பார்த்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *