மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இலங்கை குழாத்தை புதிதாக நியமிக்கப்பட்ட தேர்வுக் குழு தேர்வு செய்யவில்லை என்று அதன் தலைவர் கப்பில விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
‘மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான இலங்கை குழாத்தை முந்தைய குழுவே தேர்வு செய்தது’ என்று 61 வயது விஜேகுணவர்தன ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். ‘இந்த ஆடவர் அணிகளை எமக்கு முன்னர் செயற்பட்ட குழுவே தேர்வு செய்தது. அதனை என்னால் உறுதி செய்ய முடியும்’ என்றார்.
முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான விஜேகுணவர்தன தலைமையிலான புதிய தேர்வுக் குழுவை விளையாட்டுத் துறை அமைச்சர் கடந்த மே 21 ஆம் திகதியே நியமித்திருந்தார். கடந்த ஆண்டு டிசம்பரில் அமைக்கப்பட்ட பிரமோத்ய விக்ரமசிங்க தலைமையிலான தேர்வுக் குழுவுக்கு பதிலே புதிய தேர்வுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
புதிய தேர்வுக் குழுவில் முன்னாள் விக்கெட் காப்பு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அமல் சில்வா, பிரன்டன் குருப்பு, முன்னாள் முதல் தர மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் வருண வராகொட மற்றும் முன்னாள் மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக இருந்து ஐ.சி.சி. போட்டி மத்தியஸ்தராக மாறிய வனீசா டி சில்வா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.



