பாகிஸ்தானில் ரயில் மீது தற்கொலை தாக்குதல்

1 Min Read

பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானின் தலைநகர் குவெட்டாவில், இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற ரயில் மீது நேற்று நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் சுமார் 24 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் இராணுவ வீரர்களும் அடங்குவர் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு பிரிவினைவாதக் குழுவான பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் பொறுப்பேற்றுள்ளது.

ரயில் பாதைக்கு அருகிலுள்ள பல வீடுகளும் கட்டடங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். இந்த குண்டுத் தாக்குதலால் ரயிலின் சில பெட்டிகள் கவிழ்ந்து தீப்பிடித்தன. இந்நிலையில், குவெட்டாவில் உள்ள அரச மருத்துவமனைகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, மருத்துவர்களும் பிற மருத்துவப் பணியாளர்களும் பணியில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.

இராணுவ வீரர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் ஏற்றிய அந்த ரயில், பாகிஸ்தானின் குவெட்டாவிலிருந்து பெஷாவருக்கு சென்று கொண்டிருந்ததாக அதிகாரியொருவர் ஏ.எப்.பி இடம் கூறியுள்ளார். இத்தாக்குதலை கண்டித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், ‘இத்தகைய கோழைத்தனமான பயங்கரவாதச் செயல்கள் மக்களின் உறுதியை ஒருபோதும் தளர்த்த முடியாது. பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் ஒழிப்பதற்கான எங்கள் உறுதியில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்’ என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *