வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்களுக்கு புதுப்பிக்கப்பட்ட உத்தியோகபூர்வ டிஜிட்டல் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு விவகார அமைச்சர் விஜித ஹேரத்,இத்தளத்தை கடந்த (18) அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். பிரதியமைச்சர்கள், சிரேஷ்ட அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் இந்நிகழ்வில், காணொளியூடாக இணைந்து கொண்டனர்.இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் தெரிவித்ததாவது;
இந்த நடவடிக்கையானது அதிக செயல்திறன், அணுகல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் மூலம் பொதுச் சேவை வழங்குதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் தளம் பொதுமக்கள், வெளிநாடுகளில் உள்ள இலங்கை சமூகங்கள், வெளிநாட்டுப் பங்காளிகள், முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கையின் டிஜிட்டல் தொடர்பை வலுப்படுத்தும். முதலாவது கட்டத்தின் கீழ், புதுடில்லி, மாலைதீவு கெய்ரோ, பிரேசிலியா, வெலிங்டன் மற்றும் ஹேக் ஆகிய இடங்களில் உள்ள தூதரகங்கள் உட்பட ஏழு இலங்கைத் தூதரகங்கள் இந்த ஒருங்கிணைந்த தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் உள்ள அனைத்து இலங்கைத் தூதரகங்களையும் ஒரு தரப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தளத்தின் கீழ் கொண்டுவரும் நோக்கத்தில், இந்த அமைப்பு விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்ப்பதாகவும் வெளிநாட்டு விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.



