பத்தரமுல்லையிலுள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் தேசிய தேசிய படை வீரர் நினைவு நிகழ்வு இன்று (19) பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறுமென, போர் வீரர்கள் சேவை அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் எஸ்.பி.கொஹோன தெரிவித்தார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், நாட்டின் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்காக தமது உயிர்களை தியாகம் செய்த போர் வீரர்கள் ஆண்டு தோறும் நினைவுகூரப்படுவதாகவும் இவர்களுக்கும் தேசத்துக்கும் மரியாதை செலுத்தும் நோக்குடன் இந்தத் தினம் கடைப்பிடிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டுகளைப் போன்று இம்முறையும் இதற்கான நிகழ்வுகள் பாரம்பரிய முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், பல விசேட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிகழ்வில் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களென அதிகளவானோர் பங்கேற்கவுள்ளனர். வடக்கு, கிழக்கை சேர்ந்த தமிழ், முஸ்லிம் போர் வீரர்களின் குழுவினரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். இவர்களது குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடற்படையினர், விமானப்படையினர், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், பாதுகாப்புத் திணைக்களத்தினர், தேசிய மாணவர் படையினர், போர் வீரர்கள் சேவை ஆணைக்குழுவினர், போர் வீரர்களின் பெற்றோர் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்களுடன் 2,769 பேர் நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.



