மலையக பெருந்தோட்ட மக்களின் நில உரிமை மற்றும் வாழ்வுரிமையை வலியுறுத்திய விசேட செயலமர்வு நேற்று (17) காலை 10 மணியளவில் ஹட்டன் ‘லா எடம்ஸ்’ (Law Adams) கலாசார மண்டப கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சிப்ஸ் (CHIPS) நிறுவனத் தலைவர் தங்கவேல் கனேஷலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மலையகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பேராசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சின் செயலாளர் எம். வாமதேவன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உதவித் தலைவர் கணபதி கனகராஜ், மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஆர். ராஜாராம், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ். விஜயசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், கண்டி ஐ.எஸ்.டி. (ISD) நிறுவனத் தலைவர் பி. முத்துலிங்கம், பேராசிரியர் ஏ. எஸ். சந்திரபோஸ், சமூகச் செயற்பாட்டாளர் ஏ. ஆர். ஜோன், சமூக ஆய்வாளர் கௌதமன் ஆகியோருடன் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த நகர மற்றும் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், சட்டத்தரணிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டனர்.
பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்து இந்த அமர்வில் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



