பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம்

2 Min Read

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தேயிலை தொழிற்சாலை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்த விவசாய காப்புறுதிச் சபை தீர்மானித்துள்ளது.

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த விசேட திட்டம், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சுடன் இணைந்ததாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அந்த வகையில் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் தேயிலைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் இத்திட்டத்தில் இணையத் தகுதியுடையவர்கள் என்றும் ஊழியர்கள் தமது நிதி வசதிக்கேற்ப மாதாந்தம் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் செலுத்த வேண்டிய தவணைக்கட்டணத்தை தாங்களே தீர்மானிக்கும் வசதிகளும் வழங்கப்படவுள்ளன. பங்களிப்புத் தொகைக்கு ஏற்ப, 60 வயது நிறைவில் மாதாந்தம் 15,000 ரூபா, 20,000 ரூபா, 25,000 ரூபா அல்லது அதற்கும் அதிகமான தொகையை தோட்டத் தொழிலாளர்கள் ஓய்வூதியமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அந்த சபை தெரிவித்துள்ளது. உதாரணமாக 18 வயதில் இத்திட்டத்தில் இணைந்து, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை 600 ரூபா செலுத்தும் ஒருவர், 60 வயதிற்குப் பின்னர் மாதாந்தம் 5,000 ரூபாவை ஓய்வூதியமாகப் கொள்ள முடியும். ஓய்வூதியக் கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக, இத்திட்டத்தில் இணைந்தவர்களுக்குப் பல்வேறு காப்புறுதி நன்மைகளும் வழங்கப்படவுள்ளன: ஆயுள் காப்புறுதி மூலம் விபத்துக்கள் காரணமாக முழுமையான அல்லது பகுதியளவிலான அங்கவீனம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் நஷ்டஈடு வழங்கப்படும். மரண நட்டஈடாக ஓய்வூதியம் பெறும் வயதை அடைவதற்கு முன்னரே பங்களிப்பாளர் மரணமடைந்தால், அதற்கான இழப்பீடு வழங்கப்படும். ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருக்கும் காலத்தில் பங்களிப்பாளர் மரணமடைந்தால், அந்த ஓய்வூதிய உரிமைகள் அவரது மனைவிக்கோ அல்லது கணவருக்கோ மாற்றப்படும். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் முதுமை காலத்தில் உடல் ரீதியாகப் பணியாற்ற முடியாமல் போகும் சந்தர்ப்பங்களில், அவர்களின் சமூக நலன் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் பங்களிப்பாளர்கள் எந்த நேரத்திலும் தமது தவணைக்கட்டணத்தை அதிகரித்து, ஓய்வூதிய நன்மைகளை மென்மேலும் கூட்டிக்கொள்ளவும் வாய்ப்பளிக்கப்படும் என்றும் அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *