காலி, தங்கெதர பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி தங்கெதர, டிக்சன் சந்திப் பகுதியில் நேற்று இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்றுக் காலை 7.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாகவும் கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர், சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அஹங்கம மா வெல்ஹேன்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான நபர் என்றும் அவர் வட்டிக்குப் பணம் கொடுக்கும் வர்த்தகத்தை மேற்கொண்டு வந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. பண கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த படுகொலைக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



