கொழும்பு மாநகர சபையில் கூட்டு எதிர்க்கட்சியுடன் செயற்பட்ட உறுப்பினர்கள் மூவர் எதிர்க்கட்சியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளனர். கொழும்பு மாநகர சபையில் நேற்று நடைபெற்ற மே மாதத்துக்கான மாதாந்த கூட்டத்தின் போதே அவர்கள் தமது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளனர்.
கடந்த உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் சுயாதீனமாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மொகமட் மன்சில், இந்திக்க சஞ்சீவ லியனகே மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுனந்த லியன பதிரண ஆகிய மூன்று உறுப்பினர்களுமே நேற்று கூட்டு எதிர்க்கட்சியிலிருந்து விலகியுள்ளனர். இதன் போது கருத்து தெரிவித்துள்ள சுனந்த லியன பதிரண, தாம் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் என்றும் ரீசா சரூக் எதிர்க்கட்சித் தலைவராக செயற்படும் வரை தான் கூட்டு எதிர்க்கட்சியில் செயற்படப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.



