யாழ். போதனா வைத்தியசாலைக்கு உடனடியாக மருந்துகளை வழங்க நடவடிக்கை

1 Min Read

யாழ். போதனா வைத்தியசாலைக்குத் தேவையான மருந்துகளை உடனடியாகப் பெற்றுக்கொடுக்கவும், களஞ்சியசாலையை உடனடியாகப் புனரமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். தீ விபத்துக்குள்ளான வைத்தியசாலையின் களஞ்சியசாலையை நேரில் பார்வையிட்டு, விபத்து குறித்துப் பணிப்பாளரிடம் கேட்டறிந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

வைத்தியசாலையில் நடைபெற்றது மிக வேதனைக்குரிய, கவலைக்குரிய விடயமாகும். இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. களஞ்சியசாலை தீப்பற்றியதும் அதனை அணைக்கப் பூரண ஒத்துழைப்பு வழங்கிய வைத்தியசாலை ஊழியர்கள், யாழ். மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர், இராணுவத்தினர், விமானப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

களஞ்சியசாலையில் இருந்த பெருமளவான மருந்துகள் தீயில் எரிந்துள்ளன. வைத்தியசாலைக்குத் தேவையான மருந்துகளைத் துரித கதியில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் சுகாதார அமைச்சருடன் பேசியுள்ளேன். அதேபோன்று சேதமடைந்த களஞ்சியசாலையை மீளப் புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் மின்கசிவு என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது ஒரு நாசகாரச் செயலாக இருக்க முடியாது என நம்புகிறேன். இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகளை அரச பகுப்பாய்வு திணைக்களத்தினர் முன்னெடுக்கவுள்ளனர். அதற்காக அவர்கள் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுப்பார்கள்.

அவர்களின் இறுதி அறிக்கைகள் கிடைக்கப்பெற்ற பின்னரே விபத்துக்கான காரணத்தை உறுதியாகக் கூற முடியும். இந்தத் தீ விபத்தினால் பல கோடி ரூபாய் மருந்துகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், பெரும் சொத்துச் சேதமும் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *