ஹோ சி மின் உருவச்சிலைக்கு வியட்நாம் ஜனாதிபதி மலரஞ்சலி

1 Min Read

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To Lam), இன்று (08) முற்பகல் கொழும்பு பொது நூலக வளாகத்தில் அமைந்துள்ள ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தந்த வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (To Lam) அவர்களை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அமோகமாக வரவேற்றதுடன், இதன்போது, இரு நாடுகளினதும் தேசிய கொடிகளை ஏந்தியவாறு வீதியின் இருமருங்கிலும் நின்றிருந்த சிறுவர்கள், வியட்நாம் ஜனாதிபதிக்குத் தமது மரியாதையைச் செலுத்தினர்.May be an image of monumentMay be an image of one or more people and violinMay be an image of one or more people

ஹோ சி மின் (Ho Chi Minh) உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய வியட்நாம் ஜனாதிபதிக்கு, பாடசாலை மாணவர்களால் வரையப்பட்ட ஓவியங்களும் இங்கு கையளிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, கொழும்பு பொது நூலகத்தில் அமைந்துள்ள “வியட்நாம் – ஹோ சி மின் வளாகத்தை” (Vietnam-Ho Chi Minh Space) விரிவாக்கம் செய்யும் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட வியட்நாம் ஜனாதிபதி, அங்கிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படத் தொகுப்பைப் பார்வையிட்டார். இதன்போது, பொது நூலகத்தின் பிரதம நூலகர் வருணி கங்கபடஆரச்சியினால், ஹோ சி மின் வளாகத்தை நவீனமயப்படுத்துதல் மற்றும் விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்காகத் தயாரிக்கப்பட்ட கட்டடக்கலை வடிவமைப்புகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதுடன், இதற்காக வியட்நாமின் கணக்காய்வாளர் நாயகம் நெகுயென் ஹூ ன்கியா (Nguyen Huu Nghia), கொழும்பு மேயர் வ்ராய் கெலி பல்தசாரிடம் 50,000 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கினார்.

சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் கலாநிதி தம்மிக்க படபெந்தி, கொழும்பு மேயர் வ்ராய் கெலி பல்தசார், பிரதி மேயர் ஹேமந்த வீரகோன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *