மாலைதீவில் எதிர்வரும் ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள நான்கு நாடுகள் பங்கேற்கும் கால்பந்து தொடரில் இருந்து விலகுவதற்கு இலங்கை கால்பந்து சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
மாலைதீவு கால்பந்தின் வைர விழா கொண்டாட்டத்தை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்தப் போட்டியில் பங்களாதேஷ் மற்றும் நேபாள அணிகளும் பங்கேற்கவுள்ளன. எனினும் இந்தத் தொடரில் இருந்து இலங்கை வாபஸ் பெற தீர்மானித்தபோதும் அதற்கான காரணத்தை வெளியிடவில்லை.
எதிர்வரும் செப்டெம்பர், ஒக்டோபரில் நடைபெறவுள்ள தெற்காசிய கால்பந்து சம்மேளன (சாஃப்) கிண்ணத்திற்கு தயாராவதற்கும் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக 2000 ஆம் ஆண்டில் மாலைதீவு கால்பந்தின் பொன் விழாவை ஒட்டி நடைபெற்ற கால்பந்து தொடரில் பங்கேற்ற இலங்கை அணி இறுதிப் போட்டியில் போட்டியை நடத்திய மாலைதீவை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இலங்கை அணிக்கு இந்த ஆண்டில் ஆடும் இரண்டாவது சர்வதேச தொடராகவும் இது அமையவிருந்தது. முன்னதாக இலங்கை கால்பந்து அணி கடந்த மார்ச் மாதத்தில் சீன தைபே அணிக்கு எதிராக அடிய ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டியில் 3–1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டி இருந்தது.



