எயார் பஸ் விமானஊழல் வழக்கு; கபில சந்திரசேனவுக்கு பிணை

1 Min Read

எயார் பஸ் விமானக் கொள்வனவு ஊழல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டது.

2013 ஆம் ஆண்டு 10 எயார் பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் கொடுக்கல் வாங்கலில் 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், கடந்த மார்ச் 12 ஆம் திகதி கபில சந்திரசேன கைது செய்யப்பட்டார்.

பிரான்ஸைச் சேர்ந்த ஏர்பஸ் நிறுவனம், இந்த ஒப்பந்தத்தைப் பெற 16.84 மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்க இணங்கியதாகவும், அதில் ஒரு பகுதி கபில சந்திரசேனவின் மனைவியின் பெயரில் புரூணையில் ஆரம்பிக்கப்பட்ட போலி நிறுவன கணக்கிற்கு மாற்றப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தின் பாரிய மோசடி விசாரணைப் பிரிவினால் (SFO) 2020 இல் முதன்முதலில் இந்த ஊழல் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

இந்த ஊழல் மூலம் பெறப்பட்ட பணத்தில் சுமார் ரூ. 60 மில்லியன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்று சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்டதாக கபில சந்திரசேன வாக்குமூலம் அளித்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) நீதிமன்றில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *