மாத்தளை மாநகர அபிவிருத்தி பணிகளுக்கென 250 மில்லியன் ரூபா (25கோடி) நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மாத்தளை மாநகர முதல்வர் அஜித் கொட்டஹச்சி தெரிவித்தார்.
மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புத்தசாசன மற்றும் சமய கலாசார பிரதி அமைச்சருமான கமகெதர திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு இணங்க அரசாங்கத்தால் இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கடந்த சனிக்கிழமை (18) மாத்தளை மாநகர முதல்வரின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த மாத்தளை மாநகர முதல்வர்,
நாம் மாத்தளை மாநகர ஆட்சிப்பொறுப்பெடுத்து சொற்ப காலமே கடந்துள்ளது. இக்குறுகிய கால எல்லைக்குள் மாத்தளை மாநகரில் பல அபிவிருத்தி பணிகளை முற்றுப்பெறச் செய்துள்ளோம். இன்னும் சில அபிவிருத்திப் பணிகள் குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன. இக்குறுகியகால அபிவிருத்தி திட்டத்தின் ஒரு கட்டமாகவே மேற் சொன்ன மத்திய அரசின் 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு ஆகும்.
உலக பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் நமது அரசு நாட்டை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் பல முன்னோடி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறது. கிராமிய மற்றும் நகர அபிவிருத்திகளுக்காக உள்ளூராட்சி மன்றங்கள் மூலமாக நிதி ஒதுக்கீடு செய்து அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறது.
எமது ஒவ்வொரு அபிவிருத்தி பணிகளையும் மாத்தளை மாநகரம் எவ்வாறு அமையவேண்டும் என்ற தூரநோக்கு திட்டத்தோடு முன்னெடுத்துச் செல்கிறோம். எமது அபிவிருத்தி பணிகளால் மாத்தளை மாநகர குடியிருப்புகளுக்கோ வரியிருப்பாளருக்கோ எந்தவித வரிசுமைகளையும் சுமத்தாது எமது அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என மாநகர முதல்வர் அஜித் கொட்டஹச்சி மேலும் தெரிவித்தார்.



