இந்தியத் துணை ஜனாதிபதி இன்று இலங்கை வருகை – பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன

1 Min Read

– ஜனாதிபதி, பிரதமருடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தை
– கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இன்று (19) இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

நாளை வரை நாட்டில் தங்கியிருக்கும் இந்தியத் துணை ஜனாதிபதி, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான சமீபத்திய உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

பல நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ள அவர், அரசியல் மற்றும் சமூக ரீதியான தலைவர்களையும் சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தித்வா சூறாவளி தொடர்பான புனர்வாழ்வுப் பணிகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்கள் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தப்படவுள்ளதுடன் இந்த விஜயத்தின் போது பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை, இந்தியத் துணை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விஜயத்தையொட்டி இன்று விசேட போக்குவரத்து ஏற்பாடுகளை முன்னெடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி, இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் துணை ஜனாதிபதி, அங்கிருந்து விசேட வாகன அணிவகுப்பு மூலம் காலி முகத்திடலிலுள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு வருகை தரவுள்ளார்.

அந்த காலப் பகுதியில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, இந்தியத் துணை ஜனாதிபதி குறித்த ஹோட்டலில் இருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லவுள்ளதால், அப்பகுதியிலும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *