இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் உள்நாட்டு பல நாள் மீன்பிடிப் படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகத்திற்குரிய பொதிகளுடன் பிடிபட்ட பல நாள் மீன்பிடி படகுடன் சந்தேகநபர்களை கரைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடற்படையின் நீண்ட தூர கண்காணிப்பு கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி சோதனையின் போது, குறித்த படகிலிருந்த நான்கு சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட படகில் போதைப்பொருள் அடங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் பல பொதிகள் காணப்படுவதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது, குறித்த மீன்பிடி படகு மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு (Dikowita Fisheries Harbour) கொண்டு வரப்பட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்களைக் விரைவில் வெளியிடவுள்ளதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.




