1. காலி கோட்டையிலுள்ள புராதன நீதிமன்ற கட்டடத்தொகுதியை சுற்றுலா மேம்பாட்டு கருத்திட்டத்திற்காக பயன்படுத்தல்
ஐ.நா.வின் UNESCO அமைப்பு உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காலி கோட்டையை பார்வையிடுவதற்காகவும் தமது ஓய்வுநேரத்தை கழிப்பதற்காகவும் வருடாந்தம் 3 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். காலி பெருநகர அபிவிருத்தித் திட்டத்தின் (2021 – 2030) கீழ் காலி கோட்டை உலக மரபுரிமை சுற்றுலா வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், காலி கோட்டையில் கட்டடங்களைப் பாதுகாத்து சுற்றுலாத்துறைக்குப் பயன்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையால் ‘காலி மறுமலர்ச்சிக் கருத்திட்டம்’ தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் காலி, பெலிகஹ பிரதேசத்திலுள்ள நீதிமன்றக் கட்டடத்தொகுதியில் காலி கோட்டைக்குள் இயங்குகின்ற மேல் நீதிமன்றம், நீதவான் நீதிமன்றத்தை நிறுவி, அக்கட்டடத்தை அரச – தனியார் பங்குடமை முறைமையின் கீழ் சுற்றுலா மேம்பாட்டு கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. தேசிய மட்டத்தில் விளையாட்டுத்திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீர வீராங்கனைகளுக்கு அரசதுறையில் தொழில்வாய்ப்புக்களை வழங்கல்
தேசிய, சர்வதேச மட்டத்திலான விசேட திறமைகளுடன் கூடியவர்களும் வெற்றியீட்டிய வீர வீராங்கனைகள் உருவாகியிருப்பினும், நிரந்தர தொழில் வாய்ப்புக்கள் இன்மையால் இடைநடுவில் விளையாட்டுத்துறையிலிருந்து விலகுகின்றமை காணப்படுகின்றது. அதனால் உயர்மட்ட திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீர வீராங்களைகளைத் தக்கவைத்தல், சர்வதேச வெற்றிகளுக்கு ஊக்கமளிக்கும் நோக்கில் வீர வீராங்கனைகளின் நீண்டகால தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இயலுமை கிட்டும் வகையில் அரச, பகுதி அரச மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களில் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்குப் பொருத்தமான கொள்கைச் சட்டம் தயாரிப்பதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
3. டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அதனடிப்படையிலான அரச சந்தைவாய்ப்பை உருவாக்குதல், அபிவிருத்தி செய்தல், பயன்படுத்தல், பராமரித்தல்
இலங்கையில் சமகால அரச கட்டமைப்பில் டிஜிட்டல் தயாரிப்புக்கள், சேவைகளுக்கான மத்தியமயமாக்கப்பட்டதும் வெளிப்படைத்தன்மையுடனதுமான சந்தைவாய்ப்பு இன்மையால் வினைத்திறனற்ற பெறுகைச் செயன்முறை உருவாகியுள்ளது. தீர்வாக 2025.10.21 அன்று அமைச்சரவை தீர்மானத்திற்கமைய,’டிஜிட்டல் அபிவிருத்தி திட்டம் – கட்டம் 1′ இன் மூன்றாம் பணிக்கூறின் கீழ் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள், அதனடிப்படையிலான அரச சந்தைவாய்ப்பை உருவாக்குதல், அபிவிருத்தி செய்தல், பயன்படுத்தல் மற்றும் பராமரித்தல் கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 563 மில்லியன் ரூபா மதிப்பீட்டுச் செலவில் 2026 – 2027 காலப்பகுதியில் கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
4. வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமானக் கம்பனிக்கு ஹனிவெல் உதவி மின்வலு விநியோக அலகுக்கான திருத்தம் செய்தல், பராமரிப்புச் சேவைகளுக்கான ஒப்பந்தத்தை வழங்கல்
விமானங்களில் பிரதான இயந்திரம் இயங்காதிருக்கின்றபோது, அத்தியாவசியமான வலுசக்தி, வான்வழி வலுசக்தி போன்ற ஒத்துழைப்புக்களை வழங்குவதற்காக வர்த்தக விமானங்கள் மூலம் ஹனிவெல் உதவி மின்வலு விநியோக அலகு பயன்படுத்தப்படும். உதவி மின்வலு விநியோக அலகு பராமரிப்புப் பணிகளுக்கு மேற்கொள்வதற்கான ஸ்ரீலங்கன் விமானக் கம்பனிக்கு இன்மையால், திருத்த வேலைகள், பராமரிப்புச் சேவைகளுக்கான விலைமனுக்கள் கோரப்பட்டு, 6 விலைமனுக்கள் கிடைத்துள்ளன. விலைமனுக்கள் மதிப்பீடப்பட்ட பின் உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளைக் கருத்தில்கொண்டு, 25.17 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு வழங்குவதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
5. 2026ஆம் ஆண்டுக்கான மருத்துவ வழங்கல் பிரிவுக்குத் தேவையான சிகிச்சைக் கட்டுத் துணிகளை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான பெறுகை
பிணியாய்வு மற்றும் சத்திரசிகிச்சைக்கு அத்தியாவசியப் பொருளான சிகிச்சைக் கட்டுத்துணிகளின் வருடாந்தத் தேவையை உள்நாட்டு சிறியளவிலான உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்ய வேண்டுமென அமைச்சரவை தீர்மானித்துள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான மருத்துவ வழங்கல் பிரிவுக்கு 40 மில்லியன் மீற்றர்கள் சிகிச்சைக் கட்டுத்துணிகள் தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 282 உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் சிகிச்சைக் கட்டுத்துணிகளை வாங்குதல், சிகிச்சை கட்டுத்துணி நிர்ணயக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உயர்மட்ட நிரந்தர பெறுகை குழுவின் பரிந்துரைக்கமைய சிகிச்சை கட்டுத்துணி 40 மில்லியன் மீற்றர் அளவை உள்நாட்டு உற்பத்தியாளர்கள் 282 பேரிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
6. அநுராதபுரம் வடக்கு நீர்வழங்கல் திட்டம் – IIஆம் கட்டத்தின் கஹட்டகஸ்திகிலிய, ஹொரவபொத்தான, றம்பாவ போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நீர் விநியோக பிரதான குழாயிடல், ஏனைய சேவை இணைப்புக்களுக்கான விநியோக ஒப்பந்தத்தை வழங்கல்
பாதுகாப்பான குடிநீர் விநியோகம், நீர்வழங்கலை விரிவாக்கம் செய்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை மற்றும் இலங்கை அரசு வழங்குகின்ற நிதியைப் பயன்படுத்தி அநுராதபுரம் வடக்கு நீர் விநியோக கருத்திட்டத்தின் IIஆம் கட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. குறித்த கருத்திட்டத்தின் கீழ் பதவியா, கெப்பிட்டிகொல்லாவ பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான நீர் விநியோக பிரதான குழாயிடல், சேவை இணைப்புக்களுக்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக 2026.03.30 அன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலதிகமாக, கஹட்டகஸ்திகிலிய, ஹொரவபொத்தான, றம்பாவ போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான நீர் விநியோக குழாயிடல், சேவை இணைப்புக்களுக்கான பெறுகைக்கு 2022ஆம் ஆண்டில் ஒப்பந்தக்காரர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒப்பந்தத்தை வழங்குவதற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையால் தெரிவிக்கப்பட்டுள்ள உடன்பாடு, உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமையவும், விலைமனுதாரருக்கு, 628.10 ஜப்பான் யென் மில்லியன்களுக்கு 2,660.20 மில்லியன் இலங்கை ரூபாவுக்கும் ஒப்பந்தத்தை வழங்குவதற்காக வீடமைப்பு,நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
7. நீர்வளச் சபையின் ஒழுங்குமுறைப்படுத்தல்களைப் பலப்படுத்துவதற்காக 1964ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க நீர்வளச் சபைச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்
இலங்கையின் நீர்வளத்தைப் பாதுகாத்தல், பேணுதல், நிலத்தடி நீர் மூலம் உருவாகின்ற மேற்புற நீர் நிலைகளின் பண்புசார் , அளவுசார் காரணிகளை மேம்படுத்துவதற்குத் தேவையான சட்ட ரீதியான அடிப்படையை உறுதிப்படுத்தல், முகாமைத்துவம், நீர் மாசடைதலைத் தடுப்பதற்காக 1964ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க நீர் வளச்சபைச் சட்டத்தின் மூலம் நீர்வளச்சபை தாபிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய வர்த்தக ரீதியான பணிகள், கருத்திட்டங்களுக்கு இயற்கை நீரூற்றுக்கள் அல்லது ஆழமான அல்லது ஆழமற்ற நிலத்தடி நீரைப் பயன்படுத்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் தொடர்பாக ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆயினும், பொதுமக்களுக்கு தொல்லைகள் ஏற்படும் வகையில் நிலத்தடி நீரை இறைத்தெடுத்தல் பற்றி சமர்ப்பிக்கப்படுகின்ற முறைப்பாடுகளுக்கு சட்டத்தை அமுல்படுத்துவதில் பிரச்சினைகள் காணப்படுகின்றன. அதனால், முறையான வகையில் ஒழுங்குபடுத்துவதற்காக நீர்வளச் சபையின் பணிப்பொறுப்புக்களை விரிவாக்கம் செய்வதற்கு 1964ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க நீர்வளச் சபைச் சட்டத்தைத் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. குறித்த பணிகளுக்கான திருத்தச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக சுற்றாடல் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
8. ஆட்பதிவுப் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
ஆட்பதிவுப் பணிப்பாளர் நாயகம் பதவி வெற்றிடமாக இருப்பதுடன், குறித்த பதவியில் பதில் கடமையாற்றுவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். திணைக்களத்தில் நாளாந்த பணிப்பொறுப்புக்கள், அத்தியாவசிய கடமைகளைப் போலவே டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கல் செயன்முறைகளைத் துரிதப்படுத்த வேண்டியுள்ளதால், இப்பதவிக்காக நிரந்தரமாக அதிகாரியொருவரை நியமிக்க வேண்டியுள்ளது. தற்போது கேகாலை மாவட்டச் செயலாளர் பதவியில் கடமையாற்றுகின்ற, இலங்கை நிர்வாக சேவையின் விசேடதர அதிகாரியான எச்.எம்.ஜே.எம்.ஹேரத் ஆட்பதிவு பணிப்பாளர் நாயகமாக நியமிப்பதற்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.




