தித்வா சூறாவளியால் வீடுகளை முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ இழந்த குடும்பங்கள் மற்றும் மண்சரிவு அபாய வலயங்களில் வசிக்கும் மலையக மக்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இதற்கான யோசனைகளை ஜனாதிபதி மற்றும் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு முன்வைத்துள்ளது.இத்திட்டத்தின்கீழ், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 650 சதுர அடி பரப்பளவில் வீடுகள் நிர்மாணிக்கப்படும்.
இதற்கென தலா ஒவ்வொரு வீட்டுக்கும் ஐந்து மில்லியன் ரூபா வழங்கப்படுகிறது. இந்த வீடுகள் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்கள் மற்றும் வரைபடங்களுக்கு அமைய நிர்மாணிக்கப்படும்.
தொழிலாளி ஒருவரின் சேவை தேவையில்லையென தீர்மானிக்கப்படும் பட்சத்தில்,அரசாங்கம் வழங்கிய உதவித் தொகையை பயன்படுத்தி,வீடுகளை நிர்மாணிக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதற்கான காணியை சொந்த நிதியிலிருந்தே பெற வேண்டும்.
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான முந்தைய அறிவுறுத்தல்களில், தோட்டத் தொழிலாளர்கள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. இந்த இடைவெளியை நிரப்பும் வகையிலும், இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படக்கூடிய தோட்டக் குடும்பங்களின் நீண்டகால வீட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெருந்தோட்ட குடும்பங்களின் சுவாத்தியமான வாழ்க்கை,பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட இவர்களின் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்கும் நோக்குடன் இத்திட்டத்தை அரசாங்கம் செயற்படுத்த முன்வந்துள்ளது.




