எக்ஸ் தளத்தை வாங்கியது குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தும் பொது அறிக்கைகளை வெளியிட்டு, எலோன் மஸ்க் முதலீட்டாளர்களை வழிநடத்தியதாக கலிபோர்னியா நடுவர் மன்றம் கண்டறிந்துள்ளது.
44 பில்லியன்
டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் (Elon Musk) 2022ஆம் ஆண்டு ட்விட்டர் (தற்போது எக்ஸ்) சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் டொலர்களுக்கு வாங்கினார்.

அப்போது அவர் எக்ஸின் முழுமையான கட்டுப்பாட்டை ஏற்பதற்கு சற்று முன்பு, அவருக்கு எதிராக கூட்டாட்சி நீதிமன்றத்தில் ஒரு கூட்டு வழக்குத் தொடரப்பட்டது.
அதில் 2022 மே 13ஆம் திகதி அன்று மனுதாரர்கள், “ட்விட்டர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று மஸ்க் ட்வீட் செய்ததே, தங்களைப் போலவே எண்ணற்ற பிற முதலீட்டாளர்களும் தங்கள் பங்குகளை விற்க ஏமாற்றப்பட்டதாக” வாதிட்டனர்.
அந்தத் தளத்தில் இன்னும் பல Spam அல்லது போலி கணக்குகள் இருப்பதாக மஸ்க் கவலைப்பட்டார். மேலும், அனைத்து கணக்குகளிலும் சுமார் 5% Bots என்று அவர் நம்பினார்.
இதன்மூலம், குறைந்த விலைக்கு பேரம் பேசுவதற்காக பங்குகளின் மதிப்பை வேண்டுமென்றே குறைக்கும் நோக்கிலேயே எலோன் மஸ்க் இந்த அறிக்கைகளை வெளியிட்டார் என்று வாதி தரப்பினர் வாதிட்டனர்.
தவறாக வழிநடத்தியதற்காக பொறுப்பாவார்
இந்த நிலையில்தான், ட்விட்டரை மஸ்க் வாங்குவதற்கு முந்தைய கொந்தளிப்பான மாதங்களில், அதன் பங்கு விலையை வேண்டுமென்றே குறைத்து முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்தியதற்காக எலோன் மஸ்க் பொறுப்பாவார் என்று நடுவர் குழு கண்டறிந்துள்ளது.
ஆனால், அவர் முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்த திட்டமிடவில்லை என்று கண்டறிந்து, சில மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுவித்துள்ளது.
மார்ச் 2 அன்று விசாரணை தொடங்கிய கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு 9 பேர் கொண்ட நடுவர் குழு, சுமார் நான்கு நாட்கள் ஆலோசித்த பின்னர் தீர்ப்பை வழங்கியது.





