பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, நீதியமைச்சு இணைந்து திட்டம்

2 Min Read

நாட்டில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் மற்றும் ஏனைய குற்றங்களைத் தடுக்கும் வகையில், நடைமுறையிலுள்ள சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் நீதியமைச்சும் இணைந்து இதுதொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், சைபர் மோசடிக் குற்றங்களைக் கண்காணிக்கவும் விசாரணை செய்யவும் மாகாண மட்டத்தில் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் (எம்.பி) ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி எம்.பி, நிதி மோசடி தொடர்பாக நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்ட, சைபர் குற்றச் செயல் தொடர்பான தனியான புலனாய்வுப் பிரிவுகள் நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் நிறுவப்பட்டுள்ளனவா? எனவும் வினவினார்.

அதற்குத் தொடர்ந்து பதிலளித்த அமைச்சர் ஆனந்த விஜேபால, நாட்டில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதுதொடர்பில் கிடைத்து வரும் முறைப்பாடுகளும் அதிகரித்துள்ளன.

அந்தவகையில், சைபர் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு மாகாண ரீதியில் பிரிவு அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மேற்படி மாகாண பிரிவு அலுவலகங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் இவ்வாறு சைபர் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு அலுவலகங்கள் உருவாக்கப்படுகின்றன.

இலங்கை மத்திய வங்கியின் நிதி கட்டமைப்பின் நிதி மோசடி ஆய்வுப் பிரிவு, தொழில்நுட்ப அமைச்சு உட்படச் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் இணைந்ததாகச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு பேச்சுவார்த்தைகளும் இதுவரை நடைபெற்றுள்ளன.

அந்தவகையில், எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய சைபர் குற்றங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என்பதுடன், நாட்டின் பொலிஸ் துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியன இணைந்ததான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சைபர் குற்றங்களை இல்லாதொழிக்கும் வகையில் நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கு மேலதிகமாகப் புதிய சட்டங்களை உருவாக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பான நடவடிக்கைகளைத் தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் நீதியமைச்சும் இணைந்து ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *