லியோனல் மெஸ்ஸியின் ஹட்ரிக் கோல் மூலம் பிஃப உலகக் கிண்ணத்தை நடப்புச் சம்பியன் ஆர்ஜன்டீனா வெற்றியுடன் ஆரம்பித்திருப்பதோடு மற்றொரு வலுவான அணியான பிரான்ஸும் வெற்றி ஆரம்பத்தைப் பெற்றுள்ளது.
கன்சாஸ் சிட்டியில் இலங்கை நேரப்படி நேற்று (17) நடைபெற்ற ஜே குழுவின் அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியில் மெஸ்ஸி 17, 60 மற்றும் 76 ஆவது நிமிடங்களில் கோல்களை புகுத்தினார். இந்த கோல்கள் மூலம் உலகக் கிண்ணத்தில் அதிக கோல் பெற்ற ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோஸின் சாதனையை சமன் செய்தார். இருவரும் 16 கோல்களை பெற்றுள்ளனர்.
மெஸ்ஸியின் இந்த மூன்று கோல்கள் மூலம் 3–0 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்தி தனது குழுவில் முதல் இடத்திற்கு முன்னேறிய ஆர்ஜன்டீனா தனது இரண்டாவது போட்டியில் ஜூன் 22 ஆம் திகதி ஆஸ்திரிய அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதேவேளை பிரான்ஸ் அணி தனது முதல் உலகக் கிண்ணப் போட்டியில் செனகலை எதிர்கொண்டதோடு கைலியன் ம்பப்பே புகுத்திய இரட்டை கோல் அந்த அணியின் வெற்றியை உறுதி செய்வதாக இருந்தது. நியூயோர்க்கில் ஐ குழுவுக்காக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் சுற்றில் இரு அணிகளும் கோல் புகுத்தாதபோதும் ம்பப்பே 66 ஆவது நிமிடத்தில் கோல் எண்ணிக்கையை ஆரம்பித்தார்.
தொடர்ந்து பிரட்லி பார்கோலா பிரான்ஸ் அணிக்கு இரண்டாவது கோலை புகுத்திய நிலையில் செனகல் மேலதிக நேரத்தில் பெற்ற கோல் அதற்கு ஆறுதல் கோலாகவே அமைந்தது. இந்நிலையில் போட்டி முடியும் தறுவாயில் ம்பப்பே மற்றொரு கோலை புகுத்தி பிரான்ஸ் அணிக்காக அதிக கோல் பெற்ற வீரர்கள் வரிசையில் ஒலிவியர் கிரவுட்டை (57) பின்தள்ளி முதலிடத்திற்கு (58) முன்னேறினார். பொஸ்டனில் ஐ குழுவுக்காக நடந்த ஈராக்கிற்கு எதிரான போட்டியில் நோர்வே அணி 4–1 என கோல் கணக்கில் வெற்றியீட்டியது.



