ரஷ்யாவின் சைபிரியாவிலுள்ள அரிய வகை உலோகப் படிமத்தை அணுக இந்தியாவிற்கு ரஷ்யா அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இருநாடுகளதும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சைபீரியாவின் டொம்டோரிலுள்ள இப்படிமத்திலிருந்து மாதிரிகளைப் பெறுவது தொடர்பில் இந்திய அரசுக்குச் சொந்தமான சுரங்க நிறுவனமான ஐ.ஆர்.இ.எல். வும், ரஷ்யாவின் அரச எண்ணெய் நிறுவனமான ரோஸ்நெஃப்ட் வும் இப்பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிய வகை மணல் கனிமங்களுக்கான உள்நாட்டு விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தவும், உலகளாவிய அரிய உலோகத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் இந்தியா முயற்சிகளை முன்னெடுத்துவரும் வேளையில் இப்பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. இவ்வாறான சூழலில் இந்த அரிய வகை உலோகக் கனிம படிவத்தை அணுக ரஷ்யா அனுமதி அளித்திருக்கிறது.
மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்கள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளுக்கு அவசியமான நிரந்தர காந்தங்களின் உற்பத்தியில் இந்த அரிய மண் உலோகங்கள் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
ரொய்ட்டர்ஸ்



