நாட்டின் தேவைக்கு ஏற்ப அரிசி இறக்குமதி செய்வது தொடர்பாக அரசாங்கம் பரிசீலித்து வருவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். மேற்படி அமைச்சுசார் பாராளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பங்குபற்றி விளக்கம் அளித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சந்தையில் விற்பனையிலுள்ள சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிகளுக்கு மாற்றீடாக கடந்த ஏப்ரல் மாதம் 120,000 மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அந்த வகையில் இனி தேவை ஏற்படும் பட்சத்தில் மாத்திரம்அரிசி இறக்குமதி செய்வது தொடர்பாக ஆராயப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் நெல்லை அரிசியாக மாற்றுவதற்கும் உருளைக்கிழங்கை கொள்வனவு செய்வதற்கும் கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம் நேரடியாக தலையிட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு 220 ரூபா எனும் அடிப்படையில் கொள்வனவு செய்து, அதனை சதொச விற்பனை நிலையங்களினூடாக நுகர்வோருக்கு நியாயமான விலையில் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். நெல் உலர்த்துதல், களஞ்சியப்படுத்துதல் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்தினூடாக 1,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.



