இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 2025ஆம் ஆண்டில் 5,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொருளாதார ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2025ஆம் ஆண்டில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5,003 டொலர் ஆகும். 2024ஆம் ஆண்டில் 4,546 டொலராக இருந்த தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஓராண்டில் 457 டொலராக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய அதிகபட்ச தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2018ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. அப்போது 4,372 அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது. 2022ஆம் ஆண்டு இலங்கை பொருளாதார ரீதியாக பாதிப்பை எதிர்நோக்கியதாக அறிவிக்கப்பட்டபோது அதன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3,464 டொலராக பதிவாகியிருந்தது.
தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டின் மொத்தப் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பை அந்நாட்டின் மக்கள் தொகையால் வகுக்கக் கிடைப்பதாகும். இது ஒரு நாட்டின் பொருளாதார வலிமை மற்றும் உற்பத்தித்திறனை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஓர் அளவீடு என்பதும் குறிப்பிடத்தக்கது.



