நேற்று (12) காலை, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் முயற்சியொன்று இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் (NCU) வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.

உகண்டாவிலிருந்து டோஹா ஊடாக கட்டார் எயார்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான QR664 எனும் விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்த 47 வயதுடைய உகண்டா நாட்டுப் பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
புலனாய்வுத் தகவல்கள் மற்றும் இடர் பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, குறித்த பெண்ணின் ஆடையினுள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கொக்கைன் (Cocaine) கெப்சியூல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட 274 கிராம் எடையுடைய இந்த போதைப்பொருள் தொகையின் தெரு மதிப்பு சுமார் ரூ. 12.33 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த சந்தேகநபர் மேலும் பல போதைப்பொருள் கெப்சியூல்களை விழுங்கியிருக்கலாம் (Internal concealment) என்ற பலமான சந்தேகத்தின் அடிப்படையில், அவருக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதியுடன் கைது செய்யப்பட்ட பெண் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளதாகச் சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.




