பெண் காவலர்களை காவல்துறையில் இணைப்பதிலும், அவர்களுக்கென தனிப் பிரிவுகளை உருவாக்குவதிலும் தமிழகம் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
தமிழக காவல்துறையின் வரலாற்றில் 1974ஆம் ஆண்டு முக்கியமானதாகும்.
அப்போது முதல்முறையாக ஒரு பெண் துணை ஆய்வாளர், ஒரு தலைமைக் காவலர் மற்றும் 20 பெண் காவலர்கள் கொண்ட சிறிய குழு சென்னை மாநகர காவல்துறையில் சேர்க்கப்பட்டது.
இதன் மூலம் பெண்கள் காவல்துறையில் அதிகாரப்பூர்வமாக கால்பதித்தனர்.

இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மகளிர் காவல் படைகள் உருவாக்கப்பட்டு, காவல்துறையில் பெண்களின் பங்கு அதிகரிக்கத் தொடங்கியது.
1992ஆம் ஆண்டு, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நாட்டின் முதல் அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்டது.
ஒரு பெண் ஆய்வாளர் மற்றும் மூன்று துணை ஆய்வாளர்கள் உட்பட முழுவதும் பெண்களால் இந்த காவல் நிலையம் நிர்வகிக்கப்பட்டது.
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆண் காவலர்களிடம் பேசத் தயங்கிய சூழலில், இந்த அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கும் இடமாக மாறின.

தற்போது தமிழகம் முழுவதும் 222 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
தமிழக காவல்துறையில் பெண்கள் உயர்பதவிகளிலும் சாதனை படைத்துள்ளனர்.
1976 ஆம் ஆண்டு திலகவதி முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து லத்திகா சரண் தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி மற்றும் சென்னையின் முதல் பெண் காவல் ஆணையராகப் பணியாற்றினார்.
மேலும் அர்ச்சனா ராமசுந்தரம் சிபிஐயில் கூடுதல் இயக்குநராக பணியாற்றி தேசிய அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார்.



