அஜித் பவார் மரணம் திட்டமிட்ட சதி என அவரின் உறவினர் ரோஹித் பவார் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அஜித் பவார் மரணம்
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரும், தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் சென்ற தனி விமானம், கடந்த ஜனவரி 28 ஆம் திகதி பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் அவருடன் பயணித்த உதவியாளர், தனிப்பாதுகாவலர் மற்றும் விமானிகள் உட்பட 5 பேரும் உயிரிழந்தனர்.

இது 100% சதி இந்நிலையில் அஜித் பவாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இந்த விபத்து 100% சதி என அவரது உறவினரும் கர்ஜத் – ஜாம்கேத் தொகுதி எம்எல்ஏவுமான ரோஹித் பவார் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக விரிவாக்க படங்களுடன் பேசிய அவர், அஜித் பவார் அமைச்சரவை கூட்டத்தை முடித்த பின்னர், ஜனவரி 27 ஆம் திகதி மாலையில் சாலை வழியாக பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். அவருக்கான கான்வேயும் தயாராக இருந்தது.
கிழக்கு விதர்பாவைச் சேர்ந்த ஒரு தலைவர், அரசியல் ஆலோசகரின் ஒப்பந்தத்தை ரத்து செய்வது தொடர்பான கோப்புடன் வந்தார். அதனால் கூட்டம் முடிய தாமதம் ஆனது. இரவில் தாமதமாகவே விமானம் முன்பதிவு செய்யப்பட்டது.
அஜித் பவார் காலை 7 மணிக்கு புறப்பட திட்டமிட்டிருந்தார். ஆனால் விமானம் காலை 8.10 மணிக்கு புறப்பட்டது.
மோசமான வானிலை இருந்த போதும் மும்பையில் இருந்து விமானம் புறப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. DGCA விதிமுறைகளின்படி அது பறக்க அனுமதிக்கப்படக்கூடாது.
விமானி மீதான சந்தேகம்
மேலும், விமானம் கிளம்பும் கடைசி நேரத்தில் சாஹில் மதன் மற்றும் யாஷ் ஆகிய விமானிகள் மாற்றப்பட்டது ஏன்? விமானி சுமித் கபூர் மற்றும் துணை விமானி ஷாம்பவி பதக் ஆகியோர் கடைசி நிமிடத்தில் நியமிக்கப்பட்டனர்.
விமானி சுமித் கபூர் சில மணி நேரங்களுக்கு முன்பு ஹாங்காங்கிலிருந்து ஒரு சர்வதேச விமானத்தில் வந்து சேர்ந்தார். அவருக்கு முறையான ஓய்வு வழங்கப்பட்டதா?

மேலும், அவர் மது போதையில் இருந்ததற்காக 3 ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரை இந்த விமானத்தை இயக்க அனுமதித்தது ஏன்? விமானத்தை இயக்கும் முன்னர் அவரிடம் பரிசோதனை நடத்தப்பட்டதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், விமானத்தின் டிரான்ஸ்பாண்டர் விபத்திற்கு சற்று முன்பு டிரான்ஸ்பாண்டர் அணைக்கப்பட்டது ஏன்? இதற்கு விரிவான விளக்கம் தேவை.
ஓடுபாதை 29 தட்டையானது மற்றும் தரையிறங்குவதற்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. ஓடுபாதை 11 என்பது பிரபலமற்ற டேபிள்டாப் ரன்வே ஆகும். விமானி தரையிறங்குவதற்கு கடைசி நிமிடத்தில் ஓடுபாதை 29 க்கு பதிலாக ஓடுபாதை 11 இல் அனுமதி கேட்டது ஏன்?
காக்பிட் குரல் பதிவுகளின் தரவுப்படி, விபத்துக்கு ஒரு நிமிடம் முன்பு, துணை விமானி ஷாம்பவி பதக், “ஓ ஷிட், ஓ ஷிட்” என்று கூறுவது கேட்டது. ஆனால் விமானி கபூரிடமிருந்து எந்த குரலும் வரவில்லை. அவர் விழிப்புடன் இருந்தாரா அல்லது தூங்கி விட்டாரா அல்லது வேறு ஏதேனும் நிகழ்ந்ததா? அல்லது என்ன நடந்தாலும் விமானத்தை மோதி விடுவது என இருந்தாரா?
விரிவான விசாரணை
2023 ஆம் ஆண்டு விஎஸ்ஆர் நிறுவன விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பான இறுதி விசாரணை அறிக்கை ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இப்போதும் கூட, விஎஸ்ஆர் நிறுவன விமானங்களை உயர் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். நிறுவனத்தின் உரிமம் ஏன் ரத்து செய்யப்படவில்லை?
விமான நிறுவனத்தின் பராமரிப்பு தரவுகள் மற்றும் கருப்பு பேட்டியின் தரவுகளை பொதுவெளியில் வெளியிட வேண்டும்.
மாநில அரசின் சிஐடி விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அமெரிக்காவின் NTSB, பிரான்சின் BEA அல்லது இங்கிலாந்தின் AAIB போன்ற சர்வதேச நிபுணத்துவ ஏஜென்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு உயிருக்கு ஆபத்து இருப்பது போன்ற உணர்வால் அவரது கடைசி காலங்களில் பழக்கவழக்கங்களில் சில மாறுதல்கள் ஏற்பட்டது. உதாரணமாக, பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தண்ணீர் குடிப்பதை நிறுத்திவிட்டு, பிளாஸ்டிக் பாட்டில்களில் ஏதாவது செலுத்தப்படலாம் என்ற பயத்தில் கண்ணாடி பாட்டில்களுக்கு மாறியதாக தெரிவித்துள்ளார்.
ரோஹித் பவாரின் சந்தேகங்களுக்கு மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
முன்னதாக விபத்து நடந்த அன்றே மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி “சில நாட்களுக்கு முன்பாக, பிற கட்சியைச் சேர்ந்த சிலர் மூலம் எனக்கு ஒரு தகவல் வந்தது. இதன்படி, பாஜகவை விட்டு விலக அஜித் பவார் விருப்பப்பட்டார் என்று எனக்குத் தெரிய வந்தது.
இந்த விபத்து குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.
தற்போது அஜித் பவாரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவரே குற்றச்சாட்டு வைத்துள்ளது அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.




