இலங்கையில் தீவிரமடையும் போதை ஒழிப்பு திட்டம்: ஒரே நாளில் 906 பேர் கைது

1 Min Read

இலங்கையின் போதை ஒழிப்பு திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 906 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீவிரமடையும் போதை ஒழிப்பு திட்டம்

இலங்கை ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைய, போதைப்பொருள் இல்லாத தேசத்தை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள போதை ஒழிப்பு திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 906 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த திட்டத்தின் கீழான நடவடிக்கை நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், நாடு முழுவதும் நடத்தப்படும் சோதனைகள் மற்றும் சுற்றிவளைப்புகள் குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல் வழங்கியுள்ளது.

இலங்கையில் தீவிரமடையும் போதை ஒழிப்பு திட்டம்: ஒரே நாளில் 906 பேர் கைது | 906 Persons Arrested In Single Day In Srilanka

அந்த தகவலில், நேற்று ஒரு நாளில் மட்டும் கிட்டத்தட்ட 965 சுற்றிவளைப்பு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 2 பேர் சட்டவிரோத சொத்து குவிப்பு விசாரணைகளுக்கமைய கைது செய்யப்பட்டு இருப்பதுடன், 9 பேர் கூடுதல் விசாரணைக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான 4 பேர் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 510 கிராம் ஹெரோயின், 788 கிராம் ஐஸ், 70 கிலோகிராம் 264 கிராம் கஞ்சா, 11 ஆயிரத்து 38 கஞ்சா செடிகள், 5 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 70 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 1,783 போதை மாத்திரைகள், 930 கிராம் மதனமோதகம் மற்றும் 319 கிராம் மாவா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு எதிரான தேசிய திட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வார்கள் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *