2 குழந்தை பெற்றால் ரூ.25,000, 3வது குழந்தைக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்க இந்திய மாநிலம் ஒன்று பரிசீலித்து வருகிறது.
குறையும் குழந்தை பிறப்பு விகிதம்
உலகம் முழுவதும் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவது பெரும் பிரச்சினையாக கருதப்படுகிறது.

ஒரு காலத்தில் மக்கள் தொகை கட்டுப்பாடு திட்டங்களை செயல்படுத்தி வந்த சீனா, தற்போது குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
இதே போல், ஆந்திர மாநிலத்திலும் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க “மக்கள்தொகை மேலாண்மைக் கொள்கையை” ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிமுகப்படுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டே குழந்தை பிறப்பு விகிதம் குறைவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசிய சந்திரபாபு நாயுடு, அதிக குழந்தைகளை கொண்ட குடும்பங்களுக்கு அரசு கூடுதல் சலுகைகளை வழங்கக்கூடும் என தெரிவித்தார்.
இந்நிலையில், 1993 ஆம் ஆண்டில் 3.0 ஆக இருந்த மாநிலத்தின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) தற்போது 1.5 குறைந்துள்ளதாகவும், மக்கள்தொகை சமநிலையை பராமரிக்க சிறந்த நிலை 2.1 ஆக இருக்க வேண்டும்.
TPR விகிதம் குறைந்தால் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, வேலை செய்யும் வயதுடையவர்கள் எண்ணிக்கை குறைந்து பொருளாதாரத்தை பாதிக்கும் என முதலமைச்சர் விளக்கியுள்ளார்.
2 குழந்தை பெற்றால் உதவித்தொகை
இந்த கொள்கையில், 2 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தை பெற்றுக்கொள்ளப்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.25,000 வழங்கப்படும்.

3வது குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஊட்டச்சத்து உதவியாக மாதம் ரூ.1000 வழங்கப்படும்.
18 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வி.
3வது குழந்தையைப் பெறும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாதங்களிலிருந்து 10 மாதமாக உயர்த்தப்படும் மற்றும் ஆண்களுக்கு 2 மாத தந்தைவழி விடுப்பு ஆகியவை பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
அதேவேளையில் ஆந்திராவில் இளம் சிறார் கர்ப்பம்(Teenage Pregnancy) அதிகரித்து வருவதாகவும், இந்தியாவில் 3வது இடத்தில் ஆந்திரா உள்ளதாகவும் ஆந்திர மகளிர் ஆணையத் தலைவர் ராயபதி சைலஜா கவலை தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்கள் மூலம் சிறார்கள் ஈர்க்கப்படுவதாகவும், பெற்றோருக்கும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு திருமண நிகழ்வு ஒன்றில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரை செய்வதை சுட்டிக்காட்டி, “நாடாளுமன்ற தொகுதிகளெல்லாம் குறைகிறது என்ற நிலை வரும்போது, நாம் ஏன் அளவோடு பெற்றுக்கொள்ள வேண்டும். நாமும் 16 குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாமே என்று சொல்லக்கூடிய நிலைமை வந்துள்ளது” என பேசினார்.




