பொலிவியாவில் நடந்த சரக்கு விமான விபத்தில் 15 பேர் வரை பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சரக்கு விமானம் விபத்து
பொலிவியா நாட்டின் தலைநகர் லா பாஸ் அருகே உள்ள எல் ஆல்டோ பகுதியில் நடந்த சரக்கு விமான விபத்தில் 15 பேர் வரை உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமானப்படைக்கு சொந்தமான ஹெர்குலஸ் ரக விமானம் எல் ஆல்டோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது விமானம் நெடுஞ்சாலையில் விழுந்ததால் அங்கிருந்த வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.
இதில் விமான ஊழியர்கள் மற்றும் சாலையில் வாகனத்தில் சென்றவர்கள் என 15 பேர் வரை உயிரிழந்ததுடன், 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பொலிவிய மத்திய வங்கியின் புதிய கரன்சி நோட்டுகள் விபத்துக்குள்ளான விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
விபத்தின் போது விமானத்தில் இருந்த பெட்டிகள் உடைந்து புதிய கரன்சி நோட்டுகள் அருகில் இருந்த சாலைகள் மற்றும் வயல்வெளிகளில் சிதறியுள்ளன.
விமான விபத்துக்கு மோசமான வானிலை காரணமாக கூறப்படுகிறது, அத்துடன் விபத்தை தொடர்ந்து எல் ஆல்டோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது..




