உலகின் பல நாடுகளில் துறைமுகங்களை இயக்கும் DP World நிறுவனத்தின் தலைவர் எப்ஸ்டீன் தொடர்புகளால் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.
மின்னஞ்சல் பரிமாற்றம்
எப்ஸ்டீன் விவகாரத்தில் புதிதாக வெளியிடப்பட்ட ஆவணங்களால் DP World நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து சுல்தான் அகமது பின் சுலாயெம் வெளியேறியுள்ளார்.

பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான சுலாயெம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக எப்ஸ்டீனுடன் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களைப் பரிமாறிக்கொண்டதாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த நிலையில், கடும் அழுத்தங்களுக்கு மத்தியில் சுலாயெம் பதவி விலகியதுடன், புதிய தலைவராக Essa Kazim என்பவரை DP World நிறுவனம் உடனடியாக அறிவித்துள்ளது. தலைமை நிர்வாகியாக யுவராஜ் நாராயண் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
DP World நிறுவனமானது ஆறு கண்டங்களில் துறைமுக முனையங்களை இயக்கும் துபாய்க்குச் சொந்தமான தளவாட நிறுவனமாகும். உலகளாவிய வர்த்தக உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது, சமீபத்திய நாட்களில் அது பணிபுரியும் வணிகங்களால் அதிகரித்து வரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த வாரத்தில் பிரித்தானிய நிறுவனம் ஒன்றும் கனடாவின் நிறுவனம் ஒன்றும் DP World நிறுவனத்தில் தங்கள் புதிய முதலீடுகளை கைவிட இருப்பதாக குறிப்பிட்டிருந்தது.
பிரித்தானிய இளவரசர் வில்லியம் முன்னெடுக்கும் Earthshot திட்டத்திற்கு DP World நிறுவனமானது நிதியுதவி அளித்து வந்துள்ளது. வெளியான தரவுகளின் அடிப்படையில்,
வளைகுடாவின் மிகவும் செல்வாக்கு மிக்க வணிகப் பிரமுகர்களில் ஒருவருக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையே நெருக்கமான மற்றும் தீவிரமான உறவு இருந்ததை ஆவணங்கள் உறுதி செய்துள்ளன.

மட்டுமின்றி, சுலாயெமை அரசியல் மற்றும் வணிக உலகத்தைச் சேர்ந்த பல்வேறு சர்வதேச பிரமுகர்களுக்கு மின்னஞ்சல் மூலம் எப்ஸ்டீன் அறிமுகப்படுத்தியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு காதலிகள்
2016 ஆம் ஆண்டில், இளவரர் வில்லியமுடன் டிபி வேர்ல்டின் லண்டன் கேட்வே துறைமுகத்தை சுலாயெம் சுற்றிப்பார்த்துள்ளார். எப்ஸ்டீனுடன் தொடர்புடைய 6 மிகப்பெரிய வலிமையான நபர்களில் சுலாயெம் என்பவரும் ஒருவர் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களான Ro Khanna மற்றும் Thomas Massie ஆகியோர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
2007ல் இருந்தே சுலாயெம் எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதுவரை வெளியான தரவுகளில், இருவரும் நெருங்கிய நட்பை வளர்த்துக் கொண்டதாகவும், தொடர்ந்து ஒருவருக்கொருவர் தங்கள் பயணத் திட்டங்கள், வணிக யோசனைகள் மற்றும் தொடர்புகள், செய்தி கட்டுரைகள் மற்றும் அநாகரீகமான நகைச்சுவைகளை மின்னஞ்சல் ஊடாக பரிமாறிக்கொண்டதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சுலாயெம் தனது மிகவும் நம்பகமான நண்பர்களில் ஒருவர் என்றே எப்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளார். இரு தனித்தனியான மின்னஞ்சலில் சுலாயெம், தனக்கு ஒரு ஐரிஷ் மற்றும் உஸ்பெக் காதலி இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
2013 ஆம் ஆண்டு சுலாயெம் எப்ஸ்டீனுக்கு அனுப்பிய ஒரு மின்னஞ்சலில், அப்போதைய இளவரசர் ஆண்ட்ரூ, உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதிக்காக நடத்தும் ஒரு நிகழ்வில் மதிய உணவிற்கு அழைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.



