துபாயின் ஆட்சியாளரான ஷேக் முகம்மது, இந்திய குடும்பம் ஒன்றிற்குக் கொடுத்த இன்ப அதிர்ச்சி குறித்து அந்தக் குடும்பம் சமூக ஊடகம் ஒன்றில் செய்தி ஒன்றைப் பகிர்ந்துகொண்டுள்ளது.
துபாய் ஆட்சியாளர் கொடுத்த இன்ப அதிர்ச்சி
சௌரப் ஜெயின் என்னும் இந்தியர், வார இறுதியில் குடும்பமாக வெளியே சென்றிருந்தபோது, சற்று தொலைவில் துபாயின் ஆட்சியாளரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதம மந்திரியுமான ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூமின் கார் வருவதை கவனித்த சௌரபின் மனைவி அவரது காரைப் பார்த்து கை அசைத்துள்ளார்.

உடனே அந்தக் கார் அவர்கள் அருகே வந்துள்ளது. கார் கண்ணாடியைத் திறந்த ஷேக் முகம்மது, பதிலுக்கு சௌரப் குடும்பத்தைப் பார்த்து கையசைத்ததுடன், அவர்களை அருகில் அழைத்து நலம் விசாரித்துள்ளார்.
அவரது எளிமைக்கு தன் மகன் பெரிய ரசிகன் எனக்கூறிய சௌரப், ஷேக் முகம்மதுவிடம், தன் பிள்ளைகளான மிஷிகா மற்றும் தாக்ஸுடன் ஒரு புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கமுடியுமா என கேட்க, அவர்களுடன் போஸ் கொடுத்தது மட்டுமின்றி, மிஷிகாவுக்கு ஒரு கோல்ட் காபியும் கொடுத்தாராம் ஷேக்.
அத்துடன், அவர் தன் பிள்ளைகளிடம், கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக என்று கூறி விடைபெற்றதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறார் சௌரப்.
ஷேக்கின் எளிமை பரவலாக பேசப்படும் விடயமாகும். கடந்த ஆண்டு, துபாய் மாலில் ஷேக் முகம்மது தன் பாதுகாவலர்கள் சூழ நடந்து சென்றுகொண்டிருக்கும்போது, ஒரு பெண், யார் வருகிறார் என்று கவனிக்காமல் ஷேக் முகம்மது நடந்து செல்லும் வழியில் குறுக்கே நுழைந்துவிட்டார்.
உடனே அவரது பாதுகாவலர்கள் பரபரப்பாகி அந்தப் பெண்ணைத் தடுக்க முயல, சட்டென தன் கையைக் காட்டி அவர்களைத் தடுத்து, அந்தப் பெண் தடையின்றி நடந்து செல்ல வழிவகை செய்தார் ஷேக் முகம்மது.
அந்த நிகழ்வைக் காட்டும் வீடியோ, இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.




