கூகிள் நிறுவனத்தின் எதிர்கால AI திட்டங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத ஊழியர்களுக்கு, பணிநீக்கம் தொடர்பான அனைத்து சலுகைகளுடன் தாமாகவே வெளியேறும் வாய்ப்பை நிறுவனத்தின் வணிகப் பிரிவு வழங்க முன் வந்துள்ளது.
தாமாகவே வெளியேற
சில நாட்களுக்கு முன்னர், கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட், 2025 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 400 பில்லியன் டொலர் வருவாயைப் பதிவு செய்தது.

வெளியான தகவலின் அடிப்படையில், கூகிளின் தலைமை வணிக அதிகாரி பிலிப் ஷிண்ட்லர், உலகளாவிய வணிக அமைப்பு (GBO) பிரிவில் உள்ள சில ஊழியர்கள் இந்த தாமாகவே வெளியேற்றத்தைத் தெரிவுசெய்யலாம் என்று நிர்வாகிகளுக்கான ஒரு குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கூகிளின் GBO பிரிவானது, விளம்பர தயாரிப்புகள் மற்றும் சேவைகள், உலகளாவிய வருவாய் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை மேற்பார்வையிடுகிறது.
வெளியாகியுள்ள அறிக்கையின் அடிப்படையில், கூகிள் நிறுவனம் 2026 ஆம் ஆண்டை வலுவான நிலையில் தொடங்கியதாக பிலிப் ஷிண்ட்லர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இருப்பினும், AI தொழில்நுட்பம தொடர்ந்து விரிவாக்கம் அடைந்து வருவதை ஷிண்ட்லர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கூறுகையில், இந்த நிலை மாறும் தன்மை கொண்டது, இந்த வேகம் மின்சாரம் போலுள்ளது, அதனால் ஆபத்துகளும் அதிகம் என்றார்.
எதிர்கொள்ள முடியாதவர்கள்
அத்துடன், எதிர்காலத் திட்டங்களில் முழுமையாக ஈடுபடும் ஊழியர்களை மட்டுமே நிறுவனம் தக்கவைக்க விரும்புவதாகவும், இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த AI-ஐ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூகிள் தலைவர் கூறியுள்ளார்.
AI சவால்களை எதிர்கொள்ள முடியாதவர்கள், தாமாகவே வெளியேறலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில், தீர்வுகள் குழுக்கள், விற்பனை மற்றும் நிறுவன மேம்பாடு போன்ற பிரிவுகளில் செயல்படும் ஊழியர்கள் சிக்க வாய்ப்புள்ளது.

ஆனால், இந்த திட்டம் அமெரிக்காவில் உள்ள கூகிளின் பெரிய வாடிக்கையாளர் விற்பனைக் குழுக்களுக்கும், வாடிக்கையாளர்களை எதிர்கொள்ளும் பிற பதவிகளுக்கும் பொருந்தாது என்றே ஷிண்ட்லர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கூகிள் நிறுவனம் தனது இங்கிலாந்து ஊழியர்கள் சிலருக்கும் இதேபோன்ற அணுகுமுறையை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.




