மத்தியதரைக்கடலில் புலம்பெயர்ந்தோர் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவரை மட்டுமே மீட்க முடிந்துள்ளது.
புலம்பெயர்ந்தோர் பயணித்த படகு
2011ஆம் ஆண்டு, லிபியாவின் தலைவராக இருந்த முஅம்மர் கடாபி கொல்லப்பட்டதிலிருந்தே, அந்நாட்டு மக்கள் ஐரோப்பாவுக்குள் நுழைவதற்காக உயிரை பணயம் வைத்து ஆபத்தான முறையில் படகுகளில் பயணித்துவருகிறார்கள்.

அப்படி பயணிக்கும்போது, படகுகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. அவ்வகையில், ஜனவரி மாதத்தில் மட்டுமே படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 375 பேர் உயிரிழந்துள்ளார்கள் அல்லது மாயமாகியுள்ளார்கள்.
இந்நிலையில், கடந்த வாரம், 55 புலம்பெயர்வோருடன் படகு ஒன்று லிபியாவிலிருந்து ஐரோப்பா நோக்கி புறப்பட்டுள்ளது.
படகு புறப்பட்டு ஆறு மணி நேரம் ஆன நிலையில், al-Zawiya என்னும் நகரத்துக்கு அருகே வரும்போது அந்த படகு கவிழ்ந்துள்ளது.
தகவலறிந்த லிபியா கடலோரக் காவல் படையினர் அங்கு வந்தபோது, தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 2 பெண்களை மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடிந்துள்ளது.
அந்த பெண்களில் ஒருவரின் கணவரும், மற்றொருவரின் இரண்டு குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள்.
ஆக, அந்த இருவர் தவிர்த்து மற்ற 53 பேருமே மாயமாகிவிட்டார்கள். அவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என கருதப்படுகிறது.




