மாஸ்கோவில் ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவ உளவுத்துறை அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் துபாயில் கைது செய்யப்பட்டு, ரஷ்யாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய குடிமகன்
ரஷ்யாவின் ஃபெடரல் பாதுகாப்பு சேவை அதிகாரிகளே குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர். லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்ஸீவ், GRU-வின் துணைத் தலைவராக செயல்பட்டு வந்துள்ளார்.

மாஸ்கோவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வெள்ளிக்கிழமை அன்று அவர் பலமுறை சுடப்பட்டார் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவருக்கு, பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில், ரஷ்யாவின் ஃபெடரல் பாதுகாப்பு சேவை தெரிவிக்கையில், துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகத்தின் பேரில் லியுபோமிர் கோர்பா என்ற ரஷ்ய குடிமகன் துபாயில் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக, இந்தக் கொலை முயற்சிக்குப் பின்னால் உக்ரைன் இருப்பதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றம் சாட்டியிருந்தார்.
தொடர்பும் இல்லை
மட்டுமின்றி, இது அமைதிப் பேச்சுவார்த்தைகளை சீர்குலைப்பதற்காகவே திட்டமிடப்பட்டது என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால், இந்தத் துப்பாக்கிச்சூட்டிற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று உக்ரைன் தரப்பு கூறியது.

தளபதி அலெக்ஸீவ், GRU இராணுவ உளவுத்துறையின் துணைத் தலைவராக செயல்பட்டு வந்துள்ளார். GRU அமைப்பின் தலைவர் அட்மிரல் இகோர் கோஸ்டியுகோவ் இந்த வாரம் அபுதாபியில் உக்ரைனுடன் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ரஷ்ய பேச்சுவார்த்தைக் குழுவிற்குத் தலைமை தாங்கியிருந்தார்.

2018 ஆம் ஆண்டு சாலிஸ்பரி இரசாயனத் தாக்குதல் சம்பவத்தில் அலெக்ஸீவ் மூளையாக செயல்பட்டவர் என்றே கூறப்படுகிறது. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலிலும் இவர் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




