வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவின் எரிபொருள் இறக்குமதி செலவு குறையும் என SBI அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவின் எரிபொருள் இறக்குமதி செலவு ஆண்டுதோறும் பல பில்லியன் டொலர்களை எட்டுகிறது.
இதனை குறைக்கும் நோக்கில், வெனிசுலா நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கினால், இந்தியா ஆண்டுக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர் வரை சேமிக்க முடியும் என இந்திய ஸ்டேட் வங்கி (SBI) ஆராய்ச்சி அறிக்கை தெரிவித்துள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டதாவது,
தற்போது இந்தியா ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.
ஆனால், வெனிசுலா வழங்கும் கனரக கச்சா எண்ணெய் (heavy crude oil) ஒரு பேரலுக்கு 10 முதல் 12 டொலர் தள்ளுபடி கிடைக்கிறது.
இதனால், கூடுதல் போக்குவரத்து செலவுகள் மற்றும் சுத்திகரிப்பு சவால்கள் இருந்தாலும், இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாக நட்டம் ஏற்படாது.

தற்போது வெனிசுலா கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு சுமார் 51 டொலர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவிலிருந்து வாங்கும் எண்ணெய் விலையை விட, வெனிசுலா கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பதால், இந்தியா மொத்த இறக்குமதி செலவில் பெரிய அளவிலான சேமிப்பு பெறும் வாய்ப்பு உள்ளது.
மேலும், கப்பல் போக்குவரத்து தூரம், காப்பீடு செலவு, சுத்திகரிப்பு தொழில்நுட்பம் போன்ற அம்சங்கள் செலவில் தாக்கம் ஏற்படுத்தும் எனவும், ஆனால் தள்ளுபடி விலை காரணமாக இந்தியாவுக்கு மிகுந்த நன்மை கிடைக்கும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
SBI அறிக்கை, இந்தியா வெனிசுலா எண்ணெய்க்கு மாறினால், 3 பில்லியன் அமெரிக்க டொலர் வரை குறைக்க முடியும் என வலியுறுத்துகிறது. இது, நாட்டின் பொருளாதார நிலைத்தன்மைக்கும், எரிசக்தி பாதுகாப்புக்கும் முக்கியமானதாக இருக்கும்.




