ஜோன்ஸ்டனின் மகன் ஜொஹானிற்கு ஜனவரி 09 வரை விளக்கமறியல்

Karan
By
Karan
1 Min Read

– ஜோன்ஸ்டன் பெனாண்டோவையும் கைது செய்வது தொடர்பில் விசாரணை

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவின் மகன் ஜொஹான் பெனாண்டோவிற்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்ட அவரை, வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று (31) ஆஜர்ப்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் ஜனவரி மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜோன்ஸ்டன் பெனாண்டோ வர்த்தக, வாணிப அமைச்சராக இருந்த காலப் பகுதியில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைகேடாகப் பயன்படுத்தியமை காரணமாக, அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் நேற்று (30) ஜொஹான் பெனாண்டோ கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த முறைகேடுகளுக்கு மேலதிகமாக சம்பளம் மற்றும் கொடுப்பனவு வழங்கப்பட்டமை தொடர்பிலும் அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக, பணமோசடி, பொது சொத்துச் சட்டத்தின் கீழான குற்றங்கள், அரச சொத்துகளை தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் குற்றவியல் முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், அவர் FCID யினரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவையும் கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *