முடிந்தவரைக் கவிதைகளை மூளைதான் எழுத வைக்கும் – அருண் மயூ

Karan
By
Karan
1 Min Read
முடிந்தவரைக் கவிதைகளை
மூளைதான் எழுத வைக்கும்
இடையிடையே சில கவிக்கு
இதயமும் வரி கொடுக்கும்
ஒரு சில கவிதையைத்தான்
உள் நாக்குப் பரிந்துரைக்கும்
அடி முதல் நுனி வரைக்கும்
அப்பப்பா! நீர் சுரக்கும்
சத்தியமாய் இக் கவிதை
நானெழுதவில்லை – என்
நாவெழுதும் கவிதை
பருவ மழைக் காலம்
பசியும் பெரும் பசியாம்
படுவான் கரை வெளியின்
பனையான் தனி ருசியாம்
வெட்டுப் பனையானை
வெட்டிக் குழம்பு வைக்க
மட்டக் களப்பார்க்கு
மட்டும் தெரிஞ்ச கலை
கொட்டி ஆராய்ந்து
குந்தி இருந்து நல்லா
வெட்டுப் பனையானை
வேறாத் தெரிஞ்செடுத்து
வெட்டிக் கழுவி நல்லா
வெடுக்கு மணம் போக்கிச்
சட்டி காய்ந்து வரச்
சரியா எண்ணெயிட்டு
குட்டி வெங்காயமும்
கொஞ்சம் சீரகமும்
தட்டிப் பூண்டுமிட்டுத்
தாளிச்சி முடிஞ்சதுமே
மாங்காய் இரு துண்டும்
மணக்கும் கறி வேம்பும்
தேங்காய்த் தனிப் பாலும்
தேவை போல உப்பும்
மூடி வச்சி இறக்குனாலே
மூணு தெரு கறி மணக்கும்
தனிப்பனையான் குழம்பு வச்சாத்
தானாகப் பசியெடுக்கும்
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *