பொலன்னறுவை – மஹியங்கனை பிரதான வீதியில் தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவின் முவகம்மன பகுதியில் நேற்று (17) முச்சக்கரவண்டியும், பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 33 வயது பெண்ணொருவரும், அவரது 2 வயது மகனும் உயிரிழந்துள்ளனர்.
விபத்தைத் தொடர்ந்து முச்சக்கரவண்டி ஓட்டுநர் மற்றும் அவரது மனைவி இரண்டு மகன்கள் என நால்வர் சிகிச்சைக்காக தெஹியத்தகண்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே மனைவி மற்றும் மகன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டி சாரதி மற்றும் அவரது 11 வயது மகன் இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி தனியார் பஸ் மீது மோதிய காட்சி பஸ்ஸில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




