ஆப்கானிஸ்தான் இளையோர் அணிக்கு எதிரான 19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ண பி குழுவுக்கான போட்டியில் கடைசிவரை போராடி 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இலங்கை இளையோர் அணி தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
டுபாயில் நேற்று (15) நடைபெற்ற போட்டியில் 236 ஓட்ட வெற்றி இலக்கை துரத்திய இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு ஆரம்ப வீரர் விரான் சமுதித்த சிறப்பாக துடுப்பெடுத்தாடி 83 பந்துகளில் 62 ஓட்டங்களை பெற்றார். எனினும் முக்கிய இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் ஓட்ட வேகத்தை தக்கவைக்க போராட வேண்டி இருந்தது.
எனினும் மத்திய வரிசையில் வந்த சாமிக்க ஹீனட்டிகல பொறுப்புடன் ஆடி அணியின் வெற்றியை உறுதி செய்தார். 56 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களை பெற்றார். இதன்மூலம் இலங்கை இளையோர்கள் 49.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 238 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டினர்.
முன்னதாக நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு செத்மிக்க செனவிரத்ன மற்றும் துல்னித் சிகேரா நெருக்கடி கொடுத்தனர். இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு ஆப்கான் அணியை 50 ஓவர்களில் 235 ஓட்டங்களுக்கு சுருட்ட முடிந்தது. அந்த அணிக்காக ஆரம்ப வீரர் ஒஸ்மான் சதாத் (52) அரைச்சதம் ஒன்றை பெற்றார்.
இலங்கை இளையோர் ஏற்கனவே தனது முதல் போட்டியில் வெற்றியீட்டிய நிலையில் இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்றதன் மூலம் 4 புள்ளிகளைப் பெற்று அரையிறுதி வாய்ப்பு உறுதி செய்தது. இந்தக் குழுவில் பங்களாதேஷ் இளையோர் அணியும் தனது முதலிரு போட்டிகளிலும் வெற்றியீட்டி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்த இரு அணிகளும் தமது கடைசி குழு நிலைப் போட்டியில் நாளை (17) டுபாயில் எதிர்கொள்ளவுள்ளன.
ஆப்கானை போராடி வென்ற இலங்கை ஆசிய கிண்ண அரையிறுதிக்கு தகுதி

Leave a Comment


