தென்னாபிரிக்காவை இலகுவாக வீழ்த்தி இந்தியா தொடர் வெற்றி

Karan
By
Karan
1 Min Read

தென்னாபிரிக்காவுடனான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இந்திய அணி தொடரை 2–1 என கைப்பற்றியது.
தர்மசாலாவில் நேற்று முன்தினம் (14) வேகப்பந்துக்குச் சாதகமான ஆடுகளத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பூம்ரா தனிப்பட்ட காரணத்திற்காக பங்கேற்கவில்லை. எனினும் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட தென்னாபிரிக்க அணியின் முதல் 3 விக்கெட்டுகளையும் 7 ஓட்டங்களுக்கே வீழ்த்த அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஜித் ரானாவினால் முடிந்தது. தொடர்ந்தும் விக்கெட்டுகளை பறிகொடுத்த தென்னாபிரிக்கா 20 ஓவர்களில் 117 ஓட்டங்களுக்கே சுருண்டது. இதில் பாதிக்கும் அதிகமான ஓட்டமாக 61 ஓட்டங்களை அணித்தலைவர் எய்டன் மக்ரம் பெற்றார். தவிர மேலும் இருவர் மாத்திரமே இரட்டை இலக்க ஓட்டங்களைப் பெற்றனர். அர்ஷ்தீப், ஹர்ஜித் உடன் வருன் சக்ரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இலகுவான இலக்கை நோக்கி பதிலெடுத்தாட வந்த இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. அபிஷேக் ஷர்மா 18 பந்துகளில் 3 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 35 ஓட்டங்களை விளாசினார்.
மீண்டும் ஒருமுறை சோபிக்கத் தவறிய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். டி20 உலகக் கிண்ணம் நெருங்கியுள்ள நிலையில் யாதவ் தொடர்ந்து சோபிக்கத் தவறி வருகின்றமை இந்திய அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *