வீடுகளை சுத்தம் செய்வதற்கான கொடுப்பனவுகளை இவ்வாரத்துக்குள் முழுமையாக செலுத்தி முடிக்கவும் தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை கூட்டத்தில் ஜனாதிபதி பணிப்பு
இயற்கை அனர்த்தங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா கொடுப்பனவுகளை, இந்த வாரத்திற்குள் பூரணமாக செலுத்தி முடிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் தலைமையில் நேற்று கூடிய தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை இது தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து கவனம் செலுத்தியது. இதன்போதே, இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இவ்வாரத்திற்குள் அதற்கான நிதியை பூரணமாக செலுத்தி முடிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கு நிரந்தரத் தீர்வு காணும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், ஆபத்து ஏற்படக் கூடிய வலயங்களில் உள்ள 15,000 வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் அந்த மக்களுக்காக 8,000 வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையின் 16 ஆவது அமர்வு, நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது. தேசிய அனர்த்த முகாமைத்துவ கூட்டுப் பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் 2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தை திருத்துவது தொடர்பான பத்திரம் இதன் போது சமர்ப்பிக்கப்பட்டது. பல்தரப்பு அணுகுமுறை மூலம் தோட்டப் பகுதிகளில் மண்சரிவு அபாயத்தைக் குறைப்பதற்காக, NBRO உட்பட தொடர்புடைய தரப்பினர்கள்,தோட்ட உரிமையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து,வடிகாலமைப்பு பொறிமுறையை நிறுவுதல் மற்றும் மறுசீரமைப்பு செய்வதற்கான பொறிமுறையை நிறுவுதல் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
அத்தோடு, ஆபத்து ஏற்படக் கூடிய நாட்டின் மத்திய பிரதேசத்தை (Central Fragile Area) முகாமைத்துவம் செய்வதற்கான திட்டத்தைத் தயாரிப்பதற்காக தொழில்நுட்பக் குழுவொன்றை நியமித்தல் மற்றும் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களிலிருந்தும் தகவல்களை ஒருங்கிணைக்கும் ஒரு திட்டத்தைத் தயாரித்தல், சகல நிறுவனங்களும் அந்தத் தரவை அணுக அனுமதிக்கும் ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தைத் தயாரித்தல் என்பன தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்து, கிடைத்துள்ள அனைத்து வெளிநாட்டு நிவாரண உதவிகளையும் ஒருங்கிணைப்பதற்காக வெளிநாட்டு நிவாரண ஒருங்கிணைப்பிற்கென குழுவொன்றை நிறுவுவது தொடர்பிலும் இதற்கு அதிகாரம் வழங்குவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.ஜனாதிபதியின் தலைமையில் தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை 7 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் 07 ஆம் திகதி கூடியது. திடீர் அன்ர்த்த நிலைமையுடன் கடந்த நவம்பர் 27 ஆம் திகதி இரவு மீண்டும் அந்த சபை கூடியது. டித்வா சூறாவளிக்குப் பின்னர் இயல்பு நிலைமையை மீள ஏற்படுத்தத் தேவையான கொள்கை முடிவுகளை எடுப்பதற்கும் நிறுவன வழிகாட்டுதலை வழங்குவதற்கும் ஜனாதிபதியின் தலைமையில் இந்த சபை நேற்று கூடியது.
டித்வா சூறாவளியால் நாடு முழுவதும் 2.2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,164 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 112,110 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.அதன்படி,796 பராமரிப்பு நிலையங்களில் 72,911 பேர் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையப் பணிப்பாளர் நாயகம் இங்கு சுட்டிக்காட்டினார்.பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணம், மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரங்களை மீண்டும் கட்டியெழுப்புதல், இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம் என்பன குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டதுடன் அந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இந்த வாரத்திற்குள் இதற்கான நிதியை பூரணமாக செலுத்தி முடிக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தரவுகளைச் சேகரித்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் இதற்கான சட்ட கட்டமைப்பின் அவசியம் குறித்தும் இதன் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. இந்த நடவடிக்கைகளுக்கு முறையான செயல்முறையின் அவசியம் குறித்து ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கவனம் செலுத்தினர்.
நடைமுறைச் சாத்தியமான வேலைத்திட்டத்தின் மூலம் அடுத்த 03 ஆண்டுகளுக்குள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.
2016 ஆம் ஆண்டு வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடாக மக்களுக்கு7.51 பில்லியன் ரூபா வழங்கப்பட்ட போதிலும்,1.42 பில்லியன் ரூபாவுக்கான மீளமைப்பு செயற்பாடுகளே இடம்பெற்றுள்ளன. இதனால் அரசாங்கத்திற்கு 5.79 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.இந்த காப்புறுதி முறைமையைத் தொடர்ந்து முன்னெடுப்பதாக இருந்தால்,அது அரசாங்கத்திற்கு நன்மை பயப்பதோடு, பயனாளிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும் காப்புறுதி முறைமையாக இருக்க வேண்டும்.அதனை மீண்டும் ஆரம்பிப்பதானால், நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதில் தேவையான திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால்காந்த, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உட்பட சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பலரும் அமைச்சின் செயலாளர்களும் மாகாண ஆளுநர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.அத்துடன் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.கே. கருணாநாயக்க, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட மற்றும் முப்படைத் தளபதிகள் உட்பட பாதுகாப்புப் படைப் பிரதானிகள் மற்றும் அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



