பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தம்(18th Amendment in Sri Lanka).

Karan
By
Karan
7 Min Read

பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தம்.

• பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் படி, ஜனாதிபதி இரு தடவைகள் மாத்திரமே பதவி வகிக்கலாம் என்ற வரையறையை நீக்குவதும் அரசியலமைப்புப் பேரவைக்குப் பதிலாக பாராளுமன்றப் பேரவை எனும் புதிய நிறுவனம் ஒன்றை உருவாக்குவதுமே நோக்காகவிருந்தது.

• இத்திருத்தத்தினை நிறைவேற்றும் போது அரசாங்கமும் இத் திருத்தத்திற்காக முன்னின்ற நபர்களும் முன்வைத்த முக்கிய வாதம் யாதெனில் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி குறித்து முன்னுரிமை வழங்கப்பட வேண்டியிருப்பதால் இதற்காக நாட்டில் ஸ்திரமான நிலையொன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதாகவிருந்தது. இதனால் இத்திருத்தத்தின் பின்னர் அவ்வாறான அரசியல் ஸ்திர தன்மைக்கு வழிவகுக்கும் எனக் குறிப்பிடப்பட்டது.

• இச்சட்டவரைவானது தேசிய நலனுக்கு மிகவும் அவசரமானது எனும் வகையிலேயே உயர்நீதிமன்றுக்கு ஆற்றுபடுத்தப்பட்டது. இச்சட்டவரைவின் விதிமுறைகள் அரசியலமைப்பு ஏற்பாடுகளுடன் இணங்கியுள்ளது என்பதால் மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பிற்கு அனுப்பவேண்டிய தேவை இல்லை என 2010 செப்டம்பர் மாதம் 07ஆந் திகதி உயர்நீதிமன்றம் அறிவித்தது. இதன்பின்னர் செப்ரெம்பர் மாதம் 08ஆந் திகதி இச்சட்டவரைவு பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதன் பின்னர் அது 2/3 பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டது. 18வது திருத்தத்திற்கு பாராளுமன்றத்தில் உள்ள 225 பேர் அங்கத்தவர்களில் 166 பேர் ஆதரவாகவும் 17 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகக் கருதப்பட்ட பாராளுமன்ற பேரவை பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட 5 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். மற்றைய இருவரும் பிரதமராலும், எதிர்க்கட்சித் தலைவராலும் தனித்தனியே பெயர் குறித்து நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரது இனத்தை சாராதவர்களாக இருக்க வேண்டும்.

இத்திருத்தத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் பின்வருமாறு:

• சனாதிபதியின் பதவிக்காலம் இரு தடவைகள் மட்டும் எனும் தடை நீக்கப்பட்டமை:

இத்திருத்தத்தின் மூலம் அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட பிரதான மாற்றம் சனாதிபதி
தொடர்பில் அரசியலமைப்பில் காணப்பட்ட இரு தடவைகள் எனும் பதவிக்காலத்தை இல்லாது செய்து சனாதிபதி எத்தனை தடவையும் சனாதிபதியாக தெரிவு செய்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தமையாகும்.

• அரசியலமைப்புப் பேரவைக்குப் பதிலாகப் பாராளுமன்றப் பேரவை எனும் புதியதொரு நிறுவனம் தாபிக்கப்பட்டமை:

17ஆம் அரசியலமைப்பு திருத்தத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அரசியலமைப்பு பேரவை நீக்கப்பட்டு அதற்கு மாற்றீடாக பாராளுமன்றப் பேரவை ஒன்றைத் தாபிப்பதற்கு வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி பாராளுமன்றப் பேரவையானது
1. பிரதமர்
2. சபாநாயகர்
3. எதிர்க் கட்சித் தலைவர்
4. பிரதமரால் பெயர் குறிப்பிடப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்
5. எதிர்க் கட்சித் தலைவரால் பெயர் குறிக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆகியோரை உள்ளடக்கி இருந்தது.

இச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதில் இருந்து ஒரு வார காலத்திற்குள் இவ்விருவரும் நியமிக்கப்படாவிட்டால் சபாநாயகர் அவ்விருவரையும் நியமிக்க வேண்டும். இவர்கள் பதவிக்காலத்தில் ஜனாதிபதியால் அகற்றப்படலாம்.

• மேலும் பாராளுமன்றப் பேரவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 17ஆம் திருத்தத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அரசியலமைப்புப் பேரவையில் காணப்பட்டது போன்றல்லாமல் குறைக்கப்பட்டது. பாராளுமன்றப் பேரவையின் உறுப்பினர் எண்ணிக்கை குறைவானதாகும்.
மேலும் அது பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே உள்ளடக்கியிருந்தது.

• சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் மற்றும் அரசின் பிரதான நபர்களை நியமிக்கும்போது சனாதிபதியால் இச்சபையின் அவதானிப்பினைக் கோர வேண்டியிருந்தது:

எவ்வாறாயினும் ஒருவார காலத்திற்குள் பாராளுமன்றப் பேரவை தமது அவதா
னிப்பினை சனாதிபதிக்கு வழங்காதபோது சனாதிபதி தனது சுயவிருப்பின் அடிப்படையில் நியமனங்களை மேற்கொள்ள முடியும்.

பாராளுமன்றப் பேரவையின் அதிகாரம் மற்றும் கடமைகளைக் குறைத்தமை:

பதினேழாம் திருத்தத்தின் கீழ் சனாதிபதியால் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் அரசின்
உயர் பதவிகளுக்கும் நபர்களை நியமிக்கும்போது அது தொடர்பிலான பரிந்துரைகளை முன்வைப்பதற்கான அதிகாரம் அரசியலமைப்புப் பேரவைக்குக் காணப்பட்டது. அத்தோடு அந்த பரிந்துரைகளுக்கு ஏற்ப செயற்பட சனாதிபதி கட்டுப்பட்டவாராக இருந்தார். 18ஆம் திருத்தத்தில் தாபிக்கப்பட்ட பாராளுமன்றப் பேரவைக்கு முன்மொழிவுகளை செய்வதற்கான அதிகாரமன்றி சனாதிபதிக்கு அவதானிப்புகளை முன்வைக்கும் சந்தர்ப்பம் மட்டுமே வழங்கப்பட்டது. சனாதிபதியால் நியமனங்களை செய்தல் தொடர்பில் பாராளுமன்றப் பேரவையினை அவதானிப்பினை கோரும்போது அதனை ஒருவார காலத்திற்குள் பெற்றுகொடுக்க வேண்டும். பாராளுமன்றப் பேரவை ஒருவாரகாலத்திற்குள் அதனைச்

செய்யத் தவறின் சனாதிபதி தமது சுய விருப்பின் அடிப்படையில் நியமிக்க அதிகாரம் காணப்பட்டது. மேலும் சனாதிபதிக்கு அவதானிப்புகளை வழங்கியிருக்கும் சந்தர்ப்பத்தில் அந்த அவதானிப்பினை முழுமையாகக் கருத்திற் கொள்ளாது செயற்படவும் சனாதிபதிக்கு வாய்ப்பிருந்தது.

சுயாதீன ஆணைக்குழுக்களைச் சனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தமை:

பதினெட்டாம் அரசியலமைப்பு திருத்தத்திற்கிணங்க அரசசேவை ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு போன்ற ஆணைக்குழுக்களின்
அதிகாரங்கள் பாரியளவில் குறைக்கப்பட்டன. உதாரணமாக பதினெட்டாம் அரசியலமைப்பு
திருத்தத்தின்படி சனாதிபதியின் விருப்பத்திற்கிணங்க அரச சேவை ஆணைக்குழுவை நியமிக்க முடியும். பதினேழாம் திருத்தத்திற்கிணங்க அரசியலமைப்புப் பேரவையின் சிபாரிசுக்கமையவே சனாதிபதியினால் அரச சேவை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். எனினும் பதினெட்டாம் திருத்தத்தில் மேற்படி ஏற்பாடு மாற்றத்திற்குள்ளானது.

இத்திருத்தத்திற்கிணங்க பொது சேவை ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை நியமிக்கும்போது
சனாதிபதி தனது விருப்பின்படி செயற்பட முடியும். நியமனங்கள் தொடர்பில் எந்தவொரு சிபாரிசையும் முன்வைப்பதற்கு பாராளுமன்ற பேரவைக்கு அதிகாரம் இருக்கவில்லை.

• சனாதிபதி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பாராளுமன்றுக்கு வருகைதருவதற்கான
வாய்ப்பு வழங்கப்பட்டமை:

சனாதிபதி ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை பாராளுமன்றுக்கு வருகைதர
வேண்டும் என இத்திருத்தத்தில் விதிமுறை ஏற்படுத்தப்பட்டது. இதன்போது வாக்கினைப்
பயன்படுத்துவதைத் தவிர பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குள்ள வரப்பிரசாதங்கள், சலுகைகள் மற்றும் அதிகாரங்கள் சனாதிபதிக்கும் உரித்தாகும். மேலும் பாராளுமன்றத்தின் எந்தவொரு உறுப்பினரினதும் வரப்பிரசாதங்களை மீறுகின்றமைக்காக குற்றவாளியாக்கப்படமாட்டார்.

• பதினெட்டாம் திருத்தத்தினூடு 13 மற்றும் 17ஆவது திருத்தங்களுக்கு மாறுபட்ட வகையில் சனாதிபதி பதவியானது மேலும் பலம்மிக்க பதவியொன்றாக மாற்றப்பட்டது:

இதன் கீழ் அவர் அப்பதவியினை வகிப்பது தொடர்பில் இதுவரை காணப்பட்ட இரண்டு தடவைகள் எனும் தவணைக்காலம் நீக்கம் செய்து சனாதிபதி தாம் விரும்பும் தவணைகள் வரை சனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யட முடியுமான வகையில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டதோடு அரசின் உயர் பதவிகளுக்கும் ஆணைக்குழுக்களுக்கும் நபர்களை நியமிப்பது தொடர்பில் காணப்பட்ட மட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன. அத்தோடு 17ஆம் திருத்தத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனமும் அவற்றின் அதிகாரம் கடமைகளும் பாரியளவில் குறைக்கப்பட்டன. இதன்படி 18ஆம் திருத்தத்தில் அதிகாரமிக்க
வலுவான சனாதிபதியினை உருவாக்குவதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளமை தெளிவாகின்றது.

 

 

 ஜனாதிபதி பின்வரும் உயர் பதவிகளுக்குரிய ஆட்களையும் உறுப்பினர்களையும் தெரிவுசெய்து நியமிக்கும் போது பாராளுமன்ற பேரவையின் அவதானிப்பை கோர வேண்டும்.

  • தேர்தல் ஆணைக்குழு
  • இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
  • தேசிய பொலிஸ் ஆணைக்குழு
  • இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
  • நிதி ஆணைக்குழு
  • எல்லை நிர்ணய ஆணைக்குழு
  • பிரதம நீதியரசர்
  • உயர் நீதிமன்ற நீதிபதிகளும் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரும் நீதிபதிகளும்.
  •  நீதிச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்கள் (தவிசாளர் தவிர்ந்த)
  • சட்டமா அதிபர்
  • கணக்காய்வாளர் நாயகம்
  • நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் நாயகம்.

 

மேலும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் தலைவர் மேற்படி ஏதேனும் ஆணைக்குழு ஒன்றில் தவிசாளராக அல்லது உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்கு என எவரேனும் ஆளின் பெயரில் மேற்படி ஒரு வார காலத்துக்குள்  முன்மொழியலாம்.

நீதிச்சேவை ஆணைக்குழு:

இவ்வாணைக்குழு பிரதம நீதியரசரையும் பாராளுமன்ற பேரவை அவதானிப்பில் நியமிக்கப்பட்ட வேறு உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவரையும் கொண்டதாக காணப்படும். பிரதம நீதியரசர் இதன் தலைவராவார். உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். ஒருதடவை நியமிக்கப்பட்டவர் மீண்டும் நியமிக்கப்படலாம். கூட்ட நடப்பெண் 2 ஆகும்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு 

பாராளுமன்ற பேரவையின் அவதானிப்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் 7 ஆகக்கூடிய  எண்ணிக்கை ஆகும். இதில் 17வது அரசியலமைப்பு திருத்தத்தில் 7 என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். கூட்ட நடப்பெண் 4 ஆகும். செலவுகள் திரட்டு நிதியத்திலிருந்து வழங்கப்படும். உறுப்பினராக நியமிக்கப்படுவர் பாராளுமன்ற, உள்ளுராட்சி, மாகாணசபை உறுப்பினராக இருத்தல் கூடாது. பேரவையின் அனுமதியினை முன்கூட்டியே பெறாமல் அடுத்தடுத்த மூன்று தொடர் கூட்டங்களுக்கு சமுகமளிக்காதவர் பதவியிலிருந்து விலக்கப்படுவார்.

பகிரங்க சேவை ஆணைக்குழு 

பாராளுமன்ற பேரவையின் அவதானிப்பில் ஆகக்கூடியது 9 பேர் நியமிக்க வேண்டும். ஆனால் 17வது சீர்திருத்தத்தில் 9 பேர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். பாராளுமன்ற பேரவையின் விதப்புரையில் ஒருவரை தவிசாளராக நியமிக்கலாம். உறுப்பினராக நியமிக்கப்படுபவர் பாராளுமன்ற, உள்ளுராட்சி, மாகாணசபை உறுப்பினராக இருத்தல் கூடாது. ஆணைக்குழு செயலாளர் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படுவார். கூட்ட நடப்பெண் 5 ஆகும்.பேரவையின் அனுமதியினை முன்கூட்டியே பெறாமல் அடுத்தடுத்த மூன்று தொடர் கூட்டங்களுக்கு சமுகமளிக்காதவர் பதவியிலிருந்து விலக்கப்படுவார்.

தேர்தல் ஆணைக்குழு

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 5இல் இருந்து 3ஆக குறைக்கப்பட்டது. ஆகவே உறுப்பினர் எண்ணிக்கை 3 ஆகும். பதவிக்காலம் 5 வருடங்கள். கடந்த ஒரு தசாப்த காலமாக அரசியலமைப்பில் முக்கியத்துவம் பெற்ற தேர்தல் ஆணைக்குழு இந்த காலப்பகுதியில் அமைக்கப்படவில்லை. நடப்பு எண் 3.

பேரவையின் அனுமதியினை முன்கூட்டியே பெறாமல் அடுத்தடுத்த மூன்று தொடர் கூட்டங்களுக்கு சமுகமளிக்காதவர் பதவியிலிருந்து விலக்கப்படுவார்கள். உறுப்பினராக நியமிக்கப்படுபவர் பாராளுமன்ற, உள்ளுராட்சி, மாகாணசபை உறுப்பினராக இருத்தல் கூடாது.

பதினெட்டாவது அரசியலமைப்பு திருத்தத்தின் குறைபாடுகள்.

1. இந்த சீர்திருத்தமானது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒரு சர்வதிகாரியாக செயற்படுவதற்கு மேலும் வலு ஏற்படுத்தியது.

2. ஜனாதிபதி 3 மாதங்களுக்கு ஒரு தடைவ பாராளுமன்றத்திற்கு சமுகமளிக்க வேண்டும்
எனக் குறிப்பிடப்பட்ட போதும் தான் செய்த விடயங்கள் தொடர்பாக எந்த பொறுப்புக்கூறும் தன்மையும் இதில் காணப்படவில்லை.

3. அரசியலமைப்புப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பலமானவராக இருந்தார். இங்கு பாராளுமன்ற பேரவையில் அவ்வாறு காணப்படவில்லை.

4. இந்திய வம்சாவளி மக்கள் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறுவதற்கு போதிய
சந்தர்ப்பங்கள் இருக்கவில்லை.

5. பாராளுமன்ற பேரவையை மீறி ஜனாதிபதி தன் நியமங்களையும் செய்ய முடியும் என்பதனால் பாராளுமன்ற பேரவை ஒரு அலங்காரப் பொருளாகவே இருந்தது.

6. மொத்ததில் 18 ஆம் சீர்திருத்தம் ஜனாதிபதியின் பதவியை மேலும் உறுதிப்படுத்தியது எனலாம்.

S. Vithurshan, 

Special in political science, 

University of Peradeniya.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *