பதினேழாவது அரசியலமைப்புத் திருத்தம்!

Karan
By
Karan
8 Min Read

அறிமுகம் மற்றும் பின்னணி

பொலிஸ் சேவை உள்ளிட்ட அனைத்து அரசசேவைகளிலும் ஏனைய துறைகளிலும் காணப்பட்ட பாரபட்சம் மற்றும் சுயாதீனமற்ற தன்மையின் காரணமாக மக்கள் மேற்க்குறிப்பிட்ட  நிறுவனங்களின் மீது நம்பிக்கையை இழந்தனர். அதனால் அந்த நிறுவனங்களின் செயற்பாடு
சுயாதீனமாகவும் பாராபட்சமற்ற முறையில் அமைவதை நோக்காகக் கொண்டு அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புக்களும் முன்வைத்த கோரிக்கைகளின் பயனாக
அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டது. இத் திருத்தத்தின் கருத்துக்கள் அமைச்சரவையில் 2001ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சமர்பிக்கப்பட்டது. நீதி முன்புனராய்வுக்காக உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவிற்கு பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை போதுமானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து பாராளுமன்றத்தின் அனுமதியினை பெற்றுக்கொள்ளும் முகமாக 2001 ஒக்டோபர் மாதம் 3ம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.

இம் மசோதாவிற்கு சார்பாக 208 வாக்குகள் பாராளுமன்றத்தில் கிடைத்தது. அதன் பிறகு
சபாநாயகரின் அனுமதியினை அடுத்து 17வது அரசியல் யாப்பு திருத்தம் நடைமுறைக்கு வந்தது. மேற்படி திருத்தமானது ஜனாதிபதியின் நிர்வாக அதிகாரத்தில் அரச உயர் அதிகாரிகளை நியமிக்கும் போது காணப்பட்ட தன்னிச்சையான அதிகாரங்களைக் கட்டுபடுத்துவதுடன் சுயாதீன ஆணைகுழுக்களை தாபிப்பதினையும் பிரதான குறிகோள்களாக கொண்டிருந்தது. மேலும் இந்த
அரசியலமைப்புத் திருத்தமானது அதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்களிலும் பார்க்க சிறந்த ஜனநாயக ஆட்சியினை ஏற்படுத்த வேண்டும் என்ற
அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முன்மாதிரியான அரசியலமைப்பு திருத்தம் எனலாம்.

இந்த திருத்தத்தின் பிரகாரம் தாபிக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவையானது சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர் நியமனம் மற்றும் அரச உயர் பதவிகளுக்காக நியமிக்கப்படும் ஆட்களின் பட்டியலை பரிசீலித்து ஜனாதிபதிக்கு சிபார்சு செய்தல் அரசியலமைப்பு பேரவையின்
பிரதான செயற்பாடாகும். இதுவரை காலமும் ஜனாதிபதிக்கு காணப்பட்ட அரச உயர்பதவிகளுக்கு ஆட்களை தன்னிச்சையாக நியமிக்கும் அதிகாரம் இச்சீர்திருத்தம் மூலம்
வரையறை செய்யப்பட்டது.

17வது அரசியல் சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்.

1. அரசியமைப்பு பேரவை
2. பகிரங்க சேவை ஆணைக்குழு
3. தேர்தல் ஆணைக்குழு
4. நீதிச் சேவை ஆணைக்குழு
5. தேசிய பொலிஸ் ஆணைக்குழு.

அரசியலமைப்புப் பேரவை.

17வது திருத்தத்தின் முக்கியமான விடயம் இதுவாகும். இதில் பின்வருவோர் அங்கம் வகித்தனர்.

1. பிரதமர்
2. சபாநாயகர்
3. பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர்
4. ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்
5. பிரதமர் மற்றும் எதிர்கட்சி போன்றோரினால் பெயர் குறிப்பிடப்பட்டு ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஐந்து உறுப்பினர்கள்.

6. பிரதமரினதும் எதிர்க்கட்சி தலைவரினதும் கட்சி அல்லது சுயட்சைக் குழுவைச் சாராத ஏனைய அரசியல் கட்சி அல்லது சுயட்சைக் குழுவிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களின பெரும்பான்மையுடன் பெயர் குறித்து சிபாரிசு செய்யப்பட்டு ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவர். இதன்படி உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆகும்.

அரசியலமைப்பு பேரவையின் தலைவர் சபாநாயகராவார்.

பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்களை சிபாரிசு செய்யும் போது பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தை வகிக்கும் அரசியல்
கட்சியினதும் சுயட்சைக் குழுவினதும் தலைவர்களை காலந்தாலோசித்தல் வேண்டும்.

இவ்வுறுப்பினர்களில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாலோசனையுடன் சிறுபான்மையினரின் பிரதிநிதி என பெயர் குறித்து நியமிக்கப்படுதல் வேண்டும்.

இப்பேரவைக்கு நியமிக்கப்படுவோர் பகிரங்க வாழ்வில் தமக்கென சிறந்த
நிலையினையும் கீர்த்தியுள்ளவர்களாகவும் மற்றும் நேர்மையுடையாவர்களாகவும்
இருத்தல் வேண்டும்.

ஜனாதிபதியின் பெயர் குறித்த நியமனங்கள் பற்றி எழுத்திலாலான தகவல் கிடைத்ததும் உடனடியாக நியமனங்கள் மேற்கொள்ளுதல் வேண்டும்.

இந்நியமனங்கள் பற்றி சபாநாயகருக்கு அறிவித்தல் வேண்டும்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் புதிய சபாநாயகர், புதிய எதிர்க்கட்சித் தலைவர்,தெரிவு செய்யப்படும் வரை பழையவர்களே பேரவையின் உறுப்பினர்களாக இருத்தல்
வேண்டும்.

இவர்களது பதவிக்காலம் 3 வருடங்களாகும்.

பதவிவழி உறுப்பினர்கள் அப்பதவிக்கு புதியவர்கள் தெரிவு செய்யப்படும் வரை
பேரவையின் உறுப்பினராக இருப்பர்.

அரசியலமைப்பு பேரவையின் அதிகாரங்கள்

1. ஆணைக்குழுக்களுக்கு தலைவர்களையும் அதிகாரிகளையும் சிபாரிசு செய்தல்: அரசியலமைப்பு பேரவையின் சிபாரிசு இல்லாமல் பின்வரும் ஆணைக்குழுக்களுக்கு

ஜனாதிபதி நியமனம் செய்ய முடியாது.

1. தேர்தல் ஆணைக்குழு
2. பகிரங்க சேவை ஆணைக்குழு
3. தேசிய பொலிஸ் ஆணைக்குழு
4. இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு
5. இலஞ்ச அல்லது ஊழல் சார்ந்த துறைகளை புலனாய்வு செய்வதற்கான நிரந்தர ஆணைக்குழு.
6. நிதி ஆணைக்குழு
7. எல்லை நிர்ணய ஆணைக்குழு

2. பதவி நியமனங்களுக்கு ஜனாதிபதி சிபாரிசு செய்யும் பெயர்களை அங்கிகரீத்தல். இதனைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி சிபாரிசு செய்யும் பெயர்களை அரசியல்
அமைப்பு பேரவை அங்கீகரித்தல். அங்கீகரிக்காமல் அப்பதவிக்கு ஜனாதிபதியால் நியமனங்கள் மேற்கொள்ள முடியாது.  இப்பதவிகளுக்கு நியமிக்கப்பட்டவர்கள் அரசியல் யாப்பில் அல்லது ஏதேனும் சட்ட
ஏற்பாட்டினால் தவிர வேறு எந்த அடிப்படையிலும் பதவி நீக்க முடியாது.

உயர்நீதிமன்ற நீதிபதிகளினதும் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர்களினதும் நிமனங்கள் தொடர்பான பணிகளை பேரவை மேற்கொள்ளும் போது பிரதம நீதியரசரினதும் சட்டமா அதிபரினதும் அபிப்பிராயங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

பேரவைக் கூட்டங்கள்

பேரவை பணிகளை நிறைவேற்ற அடிக்கடி கூட்டப்படலாம்.

பேரவைக் கூட்டங்கள் பேரவை தவிசாளரின் பணிப்பின் பெயரில் பேரவைச்செயலாயளரினால் கூட்டப்படும்.

கூட்டங்களுக்கு தவிசாளர் தலைமை வகிப்பார்.

அவர் வருகைதராத சந்தாப்பத்தில் பிரதமர் தலைமை வகிப்பார்.

பிரதரும் வருகை தராத சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தலைமை
வகிப்பார்.

இம்மூவரும் சமுகம் தராதபட்சத்தில் கூட்டத்திற்கு சமுகமளித்தவர்களில் தாங்கள் விரும்பும் ஒருவரை தலைவராக செய்ற்படுத்த முடியும்.

கூட்டத்திற்கான குறைந்தபட்ச எண்ணிக்கை / நடப்பெண் 6 ஆகும்.

பேரவையின் தீர்மானங்கள் ஏகமானதாக இருத்தல் வேண்டும்.

அவ்வாறு ஏகமானதாக இல்லாத போது சமுகமளித்தவர்களில் 5 பேர் ஆதரவாக
வாக்களித்தல் வேண்டும்.

பேரவையின் தவிசாளர் இவ்வாக்களிப்பில் கலந்துகொள்ளக் கூடாது.

பேரவையின் அனுமதியினை முன்கூட்டியே பெறாமல் அடுத்தடுத்த இரு
கூட்டங்களுக்கு சமுகமளிக்காதவர் பதவியிலிருந்து விலக்கப்படுவார்.

பகிரங்க சேவை ஆணைக்குழு

அரசியல் அமைப்பு பேரவையின் சிபாரிசில் 9 பேர் நியமிக்கப்படும்.

இவர்களில் 3க்கு குறையாதோர் பகிரங்க அலுவலராக 15 வருடத்திற்கு மேற்பட்ட
அனுபவத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்.

பேரவையின் விதப்புரையில் ஒருவரை தவிசாளராக நியமிக்கலாம்.

உறுப்பினராக நியமிக்கப்படுபவர் உள்ளுராட்சி, மாகாணசபை உறுப்பினராக இருத்தல் கூடாது.

உறுப்பினராவதற்கு முன் நீதிச்சேவை அல்லது அரசியலமைப்பு பேரவை உறுப்பினரன்அப்பதவியை துறத்தல் வேண்டும்.

ஆணைக்குழு செயலாளர் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படுவார்.

ஆணைக்குழு உறுப்பினர்கள் பகிரங்க சேவையாளர்களாக கருதப்படல் வேண்டும்.

கூட்ட நடப்பெண் 5 ஆகும்.

ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டவர் அரசியல் யாப்பின் 4ஆம் அட்டவணையில
தரப்பட்டுள்ள சத்தியத்தினை செய்து கையொப்பமிடல் வேண்டும்.

தேர்தல் ஆணைக்குழு

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலையும் மக்கள் தீர்ப்புக்களையும் நடாத்த தேர்தல் ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்படும்.

இது 5 உறுப்பினர்களைக் கொண்டது.

அரசியலமைப்பு பேரவையின் சிபாரிசில் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்கள்.

ஒருவரை ஆணைக்குழு தலைவராக ஜனாதிபதி நியமிப்பார்.

பதவிக் காலம் 5 ஆண்டுகளாகும்.

கூட்ட நடப்பெண் 3 ஆகும்.

இவ்வாணைக்குழு பாராளுமன்றத்திற்கு பொறுப்புடையதாகவும் வகைகூறக்கூடியதாகவும்
காணப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் ஆணைக்குழுவின் கருமங்கள் தொடர்பான அறிக்கை
பாராளுமன்றத்தினால் சமர்ப்பிக்கப்படும்.

நீதிச் சேவை ஆணைக்குழு

இவ்வாணைக்குழு பிரதம நீதியரசரையும் அரசியலமைப்பு பேரவை சிபாரிசில் நியமிக்கப்பட்ட வேறு உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவரையும் கொண்டதாக காணப்படும்.

பிரதம நீதியரசர் இதன் தலைவராவார்.

உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும்.

ஒருதடவை நியமிக்கப்பட்டவர் மீண்டும் நியமிக்கப்படலாம்.கூட்ட நடப்பெண் 2 ஆகும்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு

அரசியல் அமைப்பு பேரவையின் சிபாரிசில் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் 7
உறுப்பினர்களைக் கொண்டது.

பகிரங்க ஆணைக்குழுவுடன் கலந்தாலோசிக்கலாம்.

பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும்.

ஒருதடவை மட்டுமே பதவிவகிக்க முடியும்.
கூட்ட நடப்பெண் 4 ஆகும்.

செலவுகள் திரட்டு நிதியத்திலிருந்து வழங்கப்படும்.

பதவி நியமனங்களுக்காக ஜனாதிபதி பரிந்துரைப்போரை அங்கீகரித்தல் –

1. உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

2. மேன்முறையீட்டு நீதிபதிகள்

அரசியல் அமைப்பு பேரவை உறுப்பினர்கள் பதவி வெற்றாகும் சந்தர்ப்பங்கள்

1. மரணமடைய்ம் போது

2. ஜனாதிபதிக்கு முகவரியிட்டு எழுதும் இராஜினாமா கடிதத்தின் மூலமாக

3. உடல், உள பலவீனம் காரணமாக

4. குடியியல் தகுதியீனத்தை விதித்தால்

பேரவையின் அனுமதி மூலம் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்படும் நியமனங்கள்.

  • உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர், உயர்நீதிமன்றத்தின் ஏனைய நீதியரசர்கள்.
  • மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் மற்றும் ஏனைய நீதியரசர்கள்.
  • நீதிசேவை ஆணைக்குழுவின் தவிசாளர் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள்.
  • சட்டமா அதிபர்.
  • பாராளுமன்ற கணக்காய்வாளர் நாயகம்.
  • ஒம்புட்ஸ்மன்
  • பொலிஸ்மா அதிபர்.
  • பாராளுமன்ற செயலாளர் நாயகம்.
  • பின்வரும் ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களையும் ஜனாதிபதி நியமிக்கின்றார்.
  • தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள்.
  • பகிரங்கச் சேகை ஆணைக்குழு உறுப்பினர்கள்.
  • தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர்கள்.
  • மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினர்கள்.
  • இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உறுப்பினர்கள்.
  • நீதி ஆணைக்குழு உறுப்பினர்கள்.
  • தேர்தல் தொகுதி ஆணைக்குழு உறுப்பினர்கள்.

நன்மைகள்

1. ஜனாதிபதியின் தான்தோன்றித்தனமான அதிகாரங்களுக்கு ஒரு தடையாக
அமைந்துள்ளது.

2. அரசேவை, நீதிச்சேவை, பொலிஸ் சேவை தேர்தல்கள் என்பவற்றில் அரசியல் ரீதியான பாரபட்சங்கள் குறைவதற்கு வாய்ப்பு உண்டு.

3. அரசக் கட்டமைப்பு மேலும் ஜனநாயகமயப்படுத்தப்படும்.

4. அரசியலமைப்பில் பல்வேறு தரப்பினரும் பங்கு பெறும் வாய்ப்பாக
அமைந்துள்ளது.

5. சிறுபான்மையினத்தோரும் பங்கு கொள்ளும் வாய்ப்பு.

6. நிர்வாக மேன்முறையீடுகள், நியாயசபை, பகிரங்கசேவை ஊழியர்களை பாதுகாக்கின்றன.

7. தேர்தல் ஆணைக்குழவிற்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தேர்தல்களை அரசியல் கட்சிகள் துஷ்பிரயோகம் செய்யாது தடுக்கின்றது.

17 ஆம் திருத்தத்தின் குறைபாடுகள்

1. அரசியலமைப்பு பேரவையிலும் ஆணைக்குழுக்களிலும் சிறுபான்மை இனத்தவர்களின் தீர்மானங்கள் தாக்கம் செலுத்தக்கூடிய ஒழுங்குகள் காணப்படாமை.

2. ஆணைக்குழுக்களில் சிறுபான்மை பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படாமை.

3. ஜனாதிபதியும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையும் ஒரே கட்சியில் இருந்தால் அரசியலமைப்பு பேரவையில் ஆளும் கட்சியின் ஆதிக்கம் காணப்படும்.

முடிவுரை

அரசியலமைப்பு பேரவையின் தீர்மானம் ஏகமனதாக இருக்க வேண்டும். அல்லது
சமூகமளித்துள்ள உறுப்பினர்களுள் 05க்கு குறையாதோரின் ஆதரவு தேவை.அரசகட்டமைப்பு மேலும் ஜனநாயக மயப்படுத்தப் -பட்டுள்ளது.சிறுபான்மை இனத்தவருக்கும் தங்கியுள்ளது. அரசியல் அமைப்பு பேரவையில் அங்கத்துவம் கிடைத்துள்ளது.

ஜனாதிபதியும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுள்ள கட்சியும் ஒரே கட்சியாக இருக்குமிடத்து அரசியலமைப்புப் பேரவையில் ஆளும் கட்சியின் ஆதிக்கம் காணப்படும்.

பல்வேறு ஆணைக்குழுக்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் தேர்தல்ஆணைக்குழுக்கள் போன்ற பல ஆணைக்குழுக்கள் தாபிக்கப்படாமை நடைமுறை சாத்தியமற்ற தன்மையை காட்டுகின்றது.இதன் வெற்றி ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் இணைந்து செயற்படுவதில் தங்கியுள்ளது. எனினும் இது நடைமுறை சாத்தியமற்றதாகும்.

S. Vithurshan, 
Special in political science, 
University of Peradeniya. 
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *